வரி சலுகைகள்- திரும்பப் பெற பிரதமரின் குழு பரிந்துரை
டெல்லி: வரும் நிதியாண்டில் செலவினங்களை கட்டுப்படுத்தி, வரி வருவாயை பெருக்கும் வகையில் வரிச் சலுகை திட்டங்கள் சிலவற்றை திரும்பப் பெற்றாக வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
பிரமதரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் 2009-10ம் நிதியாண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிடப்பட்ட பின் நிருபர்களிடம் கூறுகையில்,
'நிதி பற்றாக்குறையை குறைப்பதற்கு வருவாய் மற்றும் செலவினங்கள் ஆகிய இரு தரப்பிலும் சில மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது.
பல்வேறு பொருட்களின் மீதான கலால் வரி ரத்து மற்றும் சேவை வரி சலுகைகள் போன்ற சிலவற்றில் பாதி அளவையாவது அரசு திரும்பப் பெற்றாக வேண்டும்.
இந்தியாவில், சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தொழி்ல் நிறுவனங்களுக்கு ஆதரவு தரும் வகையில் சம்பந்தப்பட்ட சில பொருட்களின் மீதான கலால் வரி 14 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதேபோல் சேவை வரியும் 12ல் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதுபோன்ற சலுகைகளில் சில திரும்பப்பெற்றாக வேண்டும். கலால் மற்றும் சேவை வரிகளை ஒரே சீராக நிர்ணயிப்பதும் ஆதாயம் தரக்கூடியதே' என்று குறிப்பிட்டார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான கோவிந்த ராவ், 'நாங்கள் நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜிக்கு எந்த பரிந்துரைகளையும் தெரிவிக்கவில்லை.
மேலும், இதுதொடர்பான விவகாரத்தில் இறுதி முடிவெடுத்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டியது நிதி அமைச்சர் தான்' என்று தெளிவுபடுத்தினார்.
இன்று கூட்டத்துக்கு பின்னர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயரும்.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2010-11ம் ஆண்டில் 8.2 சதவீதமாக இருக்கும். 2011-12ம் ஆண்டில் 9 சதவீதமாகும்.
விவசாயத் துறை உற்பத்தி முந்தைய காலத்தை விடவும், எதிர்பார்ப்பையும் மிஞ்சிய வளர்ச்சியை அடையும்.
ஏற்றுமதி அளவு 2009-10ம் ஆண்டில் 168.7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும், இறக்குமதி 296.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலும் நடைபெற்றுள்ளதாக கணிக்கப்படுகிறது.
2010-11ம் ஆண்டில் உணவுப் பணவீக்கம் மற்ற துறைகளுக்கும் தாவலாம். அணு எரிசக்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications