'ஆகாயத்திலேயே பறப்பதால் பூமியில் நடப்பது தெரியாத ஜெ'-சென்னை மேயர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலை நடந்து கொண்டிருக்கும் திட்டத்தை விரைவில் துவக்குமாறு வலியுறுத்தி, ஜெயலலிதா போராட்டத்தை அறி்வித்திருப்பது நகைச்சுவை வரவழைப்பதாக உள்ளது என்று மேயர் கூறியுள்ளார்.

தேர்தல் என்றாலும், போராட்டம் என்றாலும் விமானத்தின் மூலம் பறந்து போய் மக்களை பார்க்கும் ஜெயலலிதாவுக்கு பூமியில் நடப்பதே தெரியவில்லை என்று மேயர் கிண்டலடித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'நாள்தோறும் பொய்களை அறிக்கைகளாக வெளியிட்டுவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேற்றும் ஒரு பொய்யுரையை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில் வில்லிவாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்க திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1996ம் ஆண்டு மேயராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 9 மேம்பாலங்கள் கட்டி மிக பெரிய தீர்வு கண்டார்.

இதைத்தொடர்ந்து 1999ம் ஆண்டு வில்லிவாக்கத்தில் 2 வாகன சுரங்கப்பாதை பணிக்காக ரயில்வே பணித்திட்டத்தில் சேர்ப்பதற்கு கடிதம் மூலம் சென்னை மாநகராட்சி சார்பில் மு.க.ஸ்டாலினால் கோரப்பட்டது.

அதன் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு ஜெயலலிதா தலைமையில் 3 வருடங்களாக 2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

ரயில்வே துறையின் மூலம் கோரிய அனுமதி கிடைக்கப்பெற்றதால் சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அதனால், சென்னை மாநகராட்சி மன்றத்தில் வில்லிவாக்கம் சுரங்கப்பாதை அமைக்க வேண்டி 2004ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னரும், ஜெயலலிதா அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த பணியினை கிடப்பில் போட்டது. தன் ஆட்சிக்காலத்தில் நடந்ததை கூட அறிந்திடாத ஜெயலலிதா போராட்டம் அறிவித்திருக்கிறார்.

2006ம் ஆண்டு கலைஞர் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட பல்வேறு பாலப்பணிகளும், சுரங்கப்பாதை பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிக்காக ஒப்பம் கோரப்பட்டு, ஒப்பந்ததாரர் அதிக விலை கோரியதால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் திருத்திய மதிப்பீடு ரூ. 13.40 கோடியில் தயாரிக்கப்பட்டு, 25.4.2007 அன்று மீண்டும் மன்றத் தீர்மானம் பெறப்பட்டது.

இப்பணிக்காக 26.10.2007 அன்று மீண்டும் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு 7.1.2008 அன்று பணி ஆணை வழங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக தனியார் தொடர்ந்த வழக்குகள் முடிந்து, நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர், அந்த நிலத்தில் நிலத்தடி நீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மார்ச் 2009ல் முடிக்கப்பட்டது.

இப்பணிக்காக 61 நபர்களுடைய தனியார் மற்றும் நத்தம் நிலங்கள் 18 கிரவுண்டு 625 சதுர அடி நிலம் ரூபாய் 3 கோடி செலவில் கையகப்படுத்தப்பட்டது.

இதில் ஜேம்ஸ் எனும் தனியார் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இப்பணிக்காக ரூ.1.22 கோடி செலவில் நிலத்தடி நீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

தற்போது சுரங்கப்பாதையின் வடக்கு பகுதியில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தெற்குப் பகுதியில் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ரயில்வே துறையினரால் ரூ. 20.76 கோடி செலவில் நடைபெற்று வரும் பணிகள் வரும் ஜூலை மாதம் முடிக்கப்படும்.

ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த பின்னரே, இணைப்பு பகுதிகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு, வரும் ஆகஸ்ட் திங்களில் முடிக்கப்படும்.

உண்மை இவ்வாறு இருக்க தேர்தல் என்றாலும் அல்லது போராட்டம் என்றாலும் ஆகாயத்தில் விமானம் மூலம் பறந்து சென்று மக்களைச் சந்திக்கும் ஜெயலலிதா பூமியில் நடப்பது என்னவென்று அறியாதது ஒன்றும் வியப்பல்ல.

2006ம் ஆண்டு திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அறிவுரைப்படி கடந்த 3 வருடங்களில் சென்னை மாநகராட்சி மூலம் 5 மேம்பாலங்களும், ஒரு சுரங்கப் பாதையும் ரூ.58 கோடி செலவில், கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

இந்த ஆண்டு 3 பாலங்களும், 2 வாகன சுரங்கப்பாதை என ரூ.172 கோடியில் பணிகள் வேகமாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன.

அதிலும் குறிப்பாக, பெரம்பூர் மேம்பாலப்பணி பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வருவதை சென்னை வாழ் மக்கள் நாள்தோறும் பாராட்டி வருவதை நல்ல உள்ளம் படைத்த அனைவரும் நன்கு அறிவர்.

இந்த பணிகளை நாள்தோறும் முடுக்கிவிட்டு, அன்றாடம் இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தமிழக முதல்வரும் துணை முதல்வரும் கேட்டறிவது அனைவரும் நன்கு அறிவர்.

கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆண்ட முன்னாள் ஜெயலலிதா சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு பாலமோ, சுரங்கப்பாதையோ கட்டாமல் சுறுசுறுப்பாக இயங்கும் தமிழக அரசையும், சென்னை மாநகராட்சியையும் கேள்வி கேட்பது வேடிக்கையானதும், வினோதமானதும் ஆகும்.

இதைவிட மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால் நடைபெற்று வரும் பணிகளுக்காக இவர் போராட்டம் அறிவித்திருப்பது தான் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+