வரும் சட்டசபை தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி-கருணாநிதி
சென்னை: 2011ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும். அந்த தேர்தலில் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றியைக் குவித்து சாதனை படைக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஒரு ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
திமுக-காங்கிரஸ் கூட்டணி மிக வலிமையாக உள்ளது. மதவாதத்துக்கும் தீய சக்திகளுக்கும் எதிராக உருவானதுதான் இந்தக் கூட்டணி.
இந்த கூட்டணியை உடைத்து விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். திமுகவிடம் இருந்து காங்கிரசை பிரித்து விட்டு, பிறகு காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுத்தி விடலாம் என்று ஜெயலலிதா கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவரது பகல் கனவு ஒரு போதும் பலிக்கப்போவது இல்லை.
2011ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும். அந்த தேர்தலில் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றியைக் குவித்து சாதனை படைக்கும்.
சமீப காலமாக அதிமுக எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயலலிதாவின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்து, அவரிடம் இருந்து விலகி வருகிறார்கள்.
இதனால் ஜெயலலிதா விரக்தி அடைந்துள்ளார். ஆனால், மக்கள் இதைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்பதற்காகத் தான் திசை திருப்பும் நாடகமாக காங்கிரசுடன் கூட்டணி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகிறார். அதிமுக சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள் கூட மக்கள் கவனத்தை திசை திருப்பும் செயல்தான்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று முன்பு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். கூட்டங்களில் எல்லாம் சோனியா வெளிநாட்டுக்காரர் என்றார். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஜெயலலிதா இப்போது என்ன சொல்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன்.
யூரியா உர விலை உயர்வு பிரச்சினை காரணமாக திமுக-காங்கிரஸ் உறவில் உரசல் ஏற்பட்டிருப்பதாக சொல்வதெல்லாம் பத்திரிகைகளின் யூகங்களே.
இந்த உரப் பிரச்சனை பற்றி சரியாக சொல்ல வேண்டுமானால் இது திமுக-காங்கிரஸ் உறவை பலப்படுத்தும் 'உரமாக' உள்ளது என்பதே உண்மை என்று கூறியுள்ளார் கருணாநிதி.
சில ஆங்கிலப் பத்திரிகைகள் மூலமாகத் தான் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி உருவாகப் போவதாக ஜெயலலிதா பேட்டி தந்தார். அவரது பாணியிலேயே ஆங்கிலப் பத்திரிக்கைக்கே பேட்டி தந்து திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என பதி்ல் தந்துள்ளார் முதல்வர் கருணாநிதி எனபது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications