மேனனுக்கு பதவி-பிரதமரின் சிறப்பு தூதர் சரண் ராஜினாமா

முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளரான ஷியாம் சரண், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதில் மிக முக்கிய பங்கு வகித்தவர்.
இதனால் இவர் பதவி ஓய்வு பெற்ற பின்னரும் பிரதமர் அலுவலகத்தி்ன் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பருவநிலை மாற்றம் தொடர்பாக நடந்து வரும் சர்வதேச பேச்சுவார்த்தைகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதராக ஷியாம் சரண் இருந்து வந்தார்.
மேலும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான உயர் மட்டக் கூட்டங்களிலும் சரண் பங்கேற்று ஆலோசனைகள் கூறுவதும் வழக்கம். இவரது ஆலோசனைகள் பிரதமரால் மிகவும் மதிக்கப்படுபவை.
இந் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனுக்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து சிதம்பரத்தின் நெருக்கடியால் நாராயணனை அந்தப் பதவியில் இருந்து நீக்கினார் பிரதமர். அவர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அவரது இடத்தில் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளரும் நாராயணனின் சிஷ்யர் என்று கருதப்படுபவருமான சிவசங்கர மேனன் நியமிக்கப்பட்டார். இதற்கு டெல்லியைச் சேர்ந்த 'மலையாள லாபி'யும் முக்கியக் காரணமாகும்.
இதனால் கடுப்பான ஷியாம் சரண் சில நாட்களாகவே கோபத்தில் இருந்து வந்தார். இந் நிலையில் வரும் மார்ச் மாத இறுதியில் பிரதமர் அலுவலகத்தில் அவரது சிறப்புப் பதவிக் காலம் முடிவுக்கு வரும் நிலையில் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
மார்ச் 14ம் தேதியே தான் ஓய்வு பெறப் போவதாக சரண் தெரிவித்துள்ளார். அவர் விரும்பியிருந்தால் மார்ச் மாதத்துக்குப் பிறகும் அவருக்கு கால நீடிப்பு கிடைத்திருக்கும்.
சிவசங்கர மேனனை விட 3 ஆண்டு சீனியரான சரண் தன்னை பிரதமர் ஒதுக்கிவிட்டதாக கருதுவதால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications