சீக்கிய இளைஞர்கள் தீவிரவாதத்தை கைவிட்டால் இந்தியா திரும்பலாம்- ப.சிதம்பரம்
அத்தாரி (பஞ்சாப்): பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்தாடியபோது வெளிநாடுகளுக்குப் போய் தஞ்சம் புகுந்த சீக்கிய இளைஞர்கள், தங்களது தீவிரவாத எண்ணங்களையும், காலிஸ்தான் என்ற சிந்தனயையும் கைவிட்டால் தாராளமாக நாடு திரும்பி தேசிய நீரோட்டத்தில் கலக்கலாம். அதை மத்திய அரசு ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியுள்ளத தீவிரவாத இளைஞர்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டு விட்டு இந்தியாவுக்குள் வரலாம் என ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு கருணை காட்டும் ப.சிதம்பரம், வெளிநாடுகளில் பல காலமாக தங்கியிருந்து வரும், நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் சீக்கியர்களுக்கு கருணை காட்ட மறுப்பது ஏன் என்று சாடியிருந்தார்.
இந்த நிலையில் தீவிரவாதப் பின்னணியுடன் பஞ்சாபிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்த சீக்கியர்கள் தங்களது தீவிரவாத எண்ணத்தைக் கைவிட்டு விட்டு நாடு திரும்பலாம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அத்தாரிக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், நிச்சயம், சீக்கிய இளைஞர்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டு விட்டு, தீவிரவாத எண்ணம், காலிஸ்தான் எண்ணம் போன்றவற்றை விட்டு விட்டால் தாராளமாக நாடு திரும்பி தேசிய நீரோட்டத்தில் அவர்கள் கலக்கலாம்.
இதை நிச்சயம் நாங்கள் ஊக்குவிப்போம். பஞ்சாப் முதல்வரும் இதுதொடர்பான திட்டத்தை அரசிடம் கொடுத்தால் மகிழ்ச்சியுடன் அதைப் பரிசீலிப்போம் என்றார் பாதல்.












Click it and Unblock the Notifications