பதவி வெறி: ஒரே குடும்பத்தில் 4வது படுகொலை!
சென்னை: ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4வது நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை, பாளையம் செட்டிக்குளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அகஸ்டின் நல்லையா (49). இவர் தனது உறவினர் திருமணத்திற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று குடும்பத்துடன் சென்னை வந்தார்.
மனைவி ஜூலியட் (43), மகள் பெமினாவுடன் (18) பெரியமேடு லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தார். வெள்ளிக்கிழமை அன்று இரவு விடுதியில் இருந்து வெளியே வந்த அகஸ்டினை காரில் வந்த ஒரு மர்மகும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிச் சாய்த்தது.
சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அகஸ்டின் பிணமானார். சத்தம் கேட்டு கீழே வந்து தடுக்க முயன்ற அகஸ்டினின் மனைவி ஜூலியட், மகள் பெமினாவையும் அக்கும்பல் வெட்டிவிட்டு தப்பியது.
சொந்த ஊரில் ஊராட்சித் தலைவர் பதவியை கைபற்றுவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அகஸ்டின் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஒரே குடும்பத்தில் நடந்த நான்காவது கொலை இது என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது.
பாளையம் செட்டிக்குளம் ஊராட்சித் தலைவர் பதவி, காலம் காலமாக ராஜநாராயணன் என்பவரின் குடும்பத்தினரிடமே இருந்தது.
கடந்த 2001ல் நடந்த தேர்தலில், அகஸ்டினின் அண்ணன் ஜோசப் வெற்றி பெற்று ஊராட்சித் தலைவரானார். தங்கள் குடும்பம் வசம் இருந்த தலைவர் பதவி பறிபோனதால் ராஜநாராயணன் குடும்பத்திற்கும், ஜோசப் குடும்பத்திற்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜோசப், அவரது தம்பி ஜான்சன் இருவரும் எதிர் கும்பலால் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். மற்றொரு அண்ணன் கிறிஸ்டியன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
தனது சகோதரர்கள் கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர்களை சிக்க வைக்க அகஸ்டின் முயற்சித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்கோஷ்டியினர் திட்டமிட்டு அகஸ்டினை தீர்த்துக் கட்டி விட்டனர். வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அகஸ்டினின் மனைவி ஜூலியட் இதுபற்றி கூறுகையில்,
'எனது கணவரை வெங்கடேஷ், காந்தி, ராஜ்நாராயணன், மயில்நாதன், வைகுண்டம், பாளையம், சீனி உள்ளிட்ட பத்து பேர் கொண்ட கும்பல் தான் கொலை செய்துள்ளது' என போலீசில் தெரிவித்துள்ளார்.
கொலை கும்பலைப் பிடிக்க போலீசார் நெல்லை விரைந்துள்ளனர். இதற்கிடையே, பாளை செட்டிக்குளத்தில் அகஸ்டினினின் ஆதரவாளர்கள் தங்கள் எதிர் தரப்பினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
கூலிப்படைகளை ஒழித்துக்கட்ட...
இதற்கிடையே, தென்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்ய நெல்லை வந்துள்ள டிஜிபி லத்திகா சரண், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூலிப்படைகளை முற்றிலும் ஓழித்து கட்ட நடவடிக்கை தொடங்கப்படும்' என்றார்.
மேலும், 'பாளையம் செட்டிக்குளத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த படுகொலைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.
அந்த குடும்பத்தினருக்கு போதிய அளவில் பாதுகாப்பு அளித்திட நடவடிக்கை எடுக்கப்படும். புளியங்குடியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் அசாம், மணிப்பூர், சிக்கிம் குழந்தைகளை அடைத்து வைத்து காப்பகம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு சம்பந்தமாக போலீசார் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து விசாரிப்பதை காட்டிலும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினால் மட்டுமே விசாரணை ஓளிவு மறைவு இல்லாமல் இருக்கும்.
பெண் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்' என்றார்.
தனிப்படை மும்பை விரைவு
இதற்கிடையே, அகஸ்டின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பை விரைந்துள்ளனர்.
சென்னையில் கொலை செய்து விட்டு அங்கிருந்து அவர்கள் மும்பைக்குத் தப்பி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பை விரைந்துள்ளனர்.
உடல் அடக்கம்..
இதற்கிடையே, கொலையான அகஸ்டின் உடல் பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊரான பாளையசெட்டிகுளத்திற்கு கொணடு வரப்பட்டது.
உடல் வருகையையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications