புதுச்சேரிக்கு தீவிரவாத மிரட்டல் - உள்துறை எச்சரிக்கை
புதுச்சேரி: தீவிரவாத அமைப்புகள், புதுச்சேரியில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று புதுச்சேரி அரசுக்கு, மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து புதுச்சேரியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு தீவிரவாத அபாயம் இருப்பதாக மத்திய அரசு தனியாக எச்சரிக்கையை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் வல்சராஜ் கூறுகையில், புதுச்சேரியில் பிரெஞ்சு நாட்டவர் அதிகம் உள்ளனர். மேலும், ஆரோவில் பகுதியில், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் உள்ளது.
வெளிநாட்டினர் அதிகம் வந்து போகும் இடமாக புதுச்சேரி இருப்பதால் அங்கு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து எந்தவகையான அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. முக்கியப் பகுதிகளில் கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் விழிப்புணர்வுடன் பணியாற்றுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றால் உடனடி நடவடிக்கையில் ஈடுபடும் வகையில், கமாண்டோப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பட்ரோல் வாகனங்களும் முக்கிய சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மோப்பா நாய்கள் சகிதம் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் படையினரும் முக்கிய இடங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான வகையிலான பொருட்களைப் பார்த்தால் தொட வேண்டாம், போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்கள் வசதிக்காக கட்டணமில்லாத தொலைபேசி வசதியும் செய்து தரப்படவுள்ளது.
ஹோட்டல்கள், கெஸ்ட் ஹவுஸ்கள், லாட்ஜுகள் உள்ளிட்டவற்றில் தீவிரக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தங்குவோர் குறித்த விவரங்களை முழுமையாக வைத்திருக்க வேண்டும் என நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications