தெலுங்கானா - மேலும் ஒரு மாணவர் தற்கொலை - ஹைதராபாத்தில் பதட்டம்

இதேபோல மேலும் ஒரு மாணவர் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவில் தனி தெலுங்கானா போராட்டாங்கள் கடந்த வாரம் முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
நேற்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில், மாணவர்கள் சட்டசபையை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், போலீசார் மாணவர்களின் பேரணிக்கு அனுமதி மறுத்தனர். இதனால் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழக வளாகத்தில் குழுமியிருந்த ஏளானமான மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கல்வீச்சு, மோதல் ஏற்பட்டது.
இந்த களேபரத்துக்கு இடையே 19 வயதே ஆன பிளஸ் 2 மாணவர் யாதையா என்பவர் திடீரென உடலில் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் தீப்பிடித்து எரிந்த நிலையில், பல்கலைக் கழக வளாகத்தில், 'ஜெய் தெலுங்கானா' என்று கோஷமிட்டபடி இங்குமங்கும் ஓடினார்.
அங்கிருந்த போலீசார் அவரை பெரும்பாடு பட்டு தடுத்து நிறுத்தி, மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
உயிரிழந்த யாதையா ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் இறக்கும் முன் எழுதி வைத்த தற்கொலை குறிப்பில்,
'நான் ஒரு அனாதை. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டேன். தனி தெலுங்கானா மாநிலம் உருவானால் எனக்கு வேலை கிடைக்கும் என நம்பினேன்.
ஆனால் தெலுங்கானா கோரிக்கை நிறைவேறுவதாக தெரியவில்லை. எனவே தெலுங்கானா மாநிலம் உருவாவதற்காக எனது உயிரை தியாகம் செய்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு மாணவர் தற்கொலை
இந்த நிலையில் மேலும் ஒரு மாணவர் தெலுங்கானாவுக்காக தற்கொலை செய்து கொண்டார்.
நல்கொண்டா மாவட்டம் கிராந்தி நகரைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஸ்ரீனிவாஸ் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக போராட்டத்தில் பங்கேற்ற இவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய கடிதத்தில் இனி தெலுங்கானா கிடைப்பது போல தெரியவில்லை. தெலுங்கானாவை பிரித்தால் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். படித்துவிட்டு வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். டிசம்பருக்குள் தெலுங்கானா கிடைக்கும் என்று நம்பினேன்.
அதற்குள் ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள் சூழ்ச்சி செய்து தடை செய்துவிட்டார்கள். எனவே நான் தற்கொலை செய்கிறேன். எனது தற்கொலைக்கு பிறகாவது தெலுங்கானா கிடைக்கட்டும் என்று எழுதி வைத்திருந்தார்.
மீண்டும் பெரும் பதட்டம்...
யாதையாவின் தற்கொலையால் ஹைதராபாத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அரசுப் பேருந்துகளை சிலர் தீவைத்துக் கொளுத்த ஆரம்பித்தனர். இதையடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
நகரின் அனைத்துப் பகுதியிலும் பதட்டம் நிலவுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சும் அளவுக்கு பெரும் பதட்டம் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications