பென்னாகரம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி-அதிமுக-பாமக புகார்
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நீடிப்பதாக அதிமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் புகார் கூறியுள்ளனர்.
இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அமுதா கூட்டினார்.
இக்கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அதிமுக பிரதிநிதியான தர்மபுரி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் விஜயன் கூறுகையில், பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் பட்டியலில் 42,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டும், குறைவான வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
மதிமுக பிரதிநிதியான அக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் கூறுகையில், ஒகேனக்கல் செல்லும் பாதையில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்க வேண்டும். தேர்தலுக்கு முன் 10 நாள்கள் ஒகேனக்கலுக்கு செல்ல யாரையும் அனுமதிக்கக் கூடாது. இதனால் தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவது, சட்ட ஒழுங்கு பிரச்னைகள் தடுக்கப்படும் என்றார்.
பாமக பிரதிநிதி பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் கூறுகையில், பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை அனைத்து கட்சிகளின் மத்தியில் சோதனை செய்தும், நிபுணர்களை வைத்து ஆய்வு செய்த பின்னரே தேர்தலுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். வாக்காளர்கள் பட்டியலில் நீக்கப்பட்டுள்ள 23,000 பேரை சேர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியான அரூர் எம்எல்ஏ டில்லிபாபு கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறி பென்னாகரம் தொகுதியில் புதிய பஸ்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட நலத் திட்டங்களை திமுகவினர் வழங்கி வருகின்றனர். வாக்காளர்கள் சேர்க்கை ரகசியமாக முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
திமுக பிரதிநிதியான முன்னாள் அமைச்சர் செல்வகணபதி,
வாக்காளர்கள் பட்டியல் வெளியீட்டில் எவ்வித சந்தேகத்திற்கும், புகாருக்கும் இடமில்லை. வாக்காளர்கள் சேர்ப்பில் விசாரணை முழுமையாக நடைபெற்றுள்ளது என்றார்.
கலெக்டர் அமுதா அறிக்கை:
இக் கூட்டம் தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குள் நுழையும் வாகனங்களை 10 செக் போஸ்ட்கள் அமைத்து பரிசோதனை செய்யப்படுவதுடன், வீடியோ கேமரா மூலமும் பதிவு செய்யப்படும்.
19,510 வாக்காளர்கள் அடங்கிய துணைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் புதிதாக சேர்ப்பதற்காக கண்டறியப்பட்ட 3,394 வாக்காளர்களின் பட்டியலை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும் இறுதி வாக்காளர் பட்டியல் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications