பெங்களூர் கார்ல்டன் டவர் கட்டடத்தில் தீ-5 பேர் பலி?
இந்த தீ விபத்தில் 5 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.
7 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் ஹோட்டல் தவிர ஏராளமான அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இன்று மாலை 4.30 மணியளவில் இந்தக் கட்டதத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பிற கீழ், மேல் மாடிகளுக்கும் பரவியது. இதையடுத்து 2 கீழ் தளங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
ஆனால், 3வது மாடிக்கு மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
அவர்கள் ஜன்னல் வழியாக உதவி கோரி கூக்குரலிட்டனர். அவர்கள் தீயணைப்பு வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள ராட்சத ஏணிகள் மூலம் மீட்டனர்.
மேலும் பலரை தீயணைப்பு வீரர்கள் கயிறுகளைக் கட்டி இறக்கினர்.
மேலும் பலர் கீழே விரிக்கப்பட்ட வலைகளில் குதித்து உயிர் தப்பினர்.
ஆனால், பலர் வலைகள் விரிக்கப்படும் முன்பே அச்சத்தில் மேல் மாடிகளில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்துள்ளனர். கடும் எலும்பு முறிவுகளுடன் அவர்கள் அருகே உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 5 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சாரியா தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.
கட்டிடத்தில் இருந்து குதித்தவர்கள் மற்றும் தீக் காயம் அடைந்தவர்கள் என சுமார் 40 பேர் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்து காரணமாக அப்பகுதியிலும், அக்கம் பக்கத்துச் சாலைகளிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications