பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்த சரியான ஆவணம் கேட்கிறது சிபிஐ

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு கடந்த மே மாதம் 19ம் தேதி அறிவித்தது.
ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப் புலிகளின் இணைய தளத் தகவல் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சேர்க்கப்பட்டுள்ளதால், அவரின் மரணச் சான்றிதழை இந்தியா கேட்டிருந்தது.
இலங்கை தரப்பில் இருந்து பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்யும் ஆவணம் சிபிஐக்கு கிடைத்திருப்பதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஆனால் இலங்கை அரசு நேரடியாக மரணச் சான்றிதழ் தராமல், கொழும்பு நீதிமன்றத்தின் மூலம் இந்திய தூதருக்கு வழங்கப்பட்ட ஒரு ஆவணத்தை இந்தியாவிடம் வழங்கியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை மேற்கொண்டிருக்கும் சிபிஐ தரப்பில் இந்த ஆவணத்தை மரணச் சான்றிதழாக கருத முடியாது என்றும், பிரபாகரன் மரணத்தை உறுதி செய்ய இந்த ஆவணம் போதாது என்றும் கூறிவிட்டனர்.
இலங்கை தரப்பில் தரப்பட்ட இந்த ஆவணத்தை, இந்திய நீதிமன்றங்களில் பயன்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
எனவே, பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் முறையான ஆவணத்தை தருமாறு இலங்கையிடம் கேட்டு சிபிஐ தரப்பில் இருந்து கடிதம் அனுப்பபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications