டபிள்யூ.ஆர். வரதராஜன் மரணத்திற்கு பிரகாஷ் காரத்தின் பிடிவாதமே காரணம்- தொண்டர்கள் குமுறல்
சென்னை: மிகப் பெரிய ஊழலைச் செய்த கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் பினரயி விஜயன் விவகாரத்தில் மிகவும் மென்மையாக நடந்து கொண்ட சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், டபிள்யூ.ஆர்.வரதராஜன் விவகாரத்தில் மட்டும் மிகத் தீவிரமாக நடந்து கொண்டார். இதனால்தான் அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் வரதராஜன் தற்கொலை வரை போய் விட்டார் என்று சிபிஎம் கட்சியினர் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் நடந்த சிபிஎம் மத்திய கமிட்டி, டபிள்யூ.ஆர்.வரதராஜன் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க அவரை அழைத்திருந்தது. அப்போது அவர்கள் அடுக்கடுக்காக சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு பெரும்பாலும் மெளனமாகவே இருந்தாராம் வரதராஜன். மிகச் சில வார்த்தைகளையே அவர் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒரு கம்யூனிஸ்ட் எதைச் செய்யக் கூடாதோ அதை நான் செய்யவில்லை. கட்சியின் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன். கம்யூனிஸ்ட்டாகவே வாழ்ந்தேன். கம்யூனிஸ்ட்டாகவே சாவேன் என்று மட்டும் கூறினாராம் வரதராஜன்.
அதன் பின்னரே கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார் வரதராஜன். அது நடந்த சில நாட்களுக்குப் பின்னர்தான் அவர் காணாமல் போனார், உடலும் சில நாட்கள் கழித்து போரூர் ஏரியிலிருந்து மீட்கப்பட்டது.
வரதராஜனின் முடிவு கம்யூனிஸ்ட் கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் உள்வட்டாரத் தகவல்கள் கூறுகையில், மிகச் சிறந்த தொழிற்சங்கவாதியாக திகழ்ந்தவர் வரதராஜன். தேசிய அளவிலான பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்.
பிப்ரவரி 6ம் தேதி கொல்கத்தாவில் நடந்த விசாரணைக் கூட்டத்தில் கண்களில் நீர் ததும்பக் காட்சி அளித்தார் வரதராஜன். மிகச் சில வார்த்தைகளையே அவர் பேசினார்.
அப்போது பிரகாஷ் காரத் பேசும்போது வரதராஜனுக்கு எதிரான புகார்களை அடுக்கினார். உங்களை நீக்குமாறு தமிழ்நாடு மாநில கமிட்டி பரிந்துரைத்துள்ளதாக வரதராஜனிடம் கூறினார். வரதராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் காரத் என்றனர்.
இந்த நிலையில் கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் பினரயி விஜயன் மீது மிகப் பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. சிபிஐ விசாரணைக்கும் இது உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் விஜயனைக் காக்க படு வேகமாக செயல்பட்டார் காரத். அதேசமயம், வரதராஜன் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்து விட்டார். இதுவே அவரது மரணத்திற்குக் காரணம் என்கின்றனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
மேலும் வரதராஜன் மீது சுமத்தப்பட்டதாக கூறப்படும் ஒரே குற்றச்சாட்டு என்னவென்றால் ஒரு பெண்ணுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது என்பது மட்டும்தான். இதுதொடர்பாக சட்டப்படியான புகாரோ அல்லது நடவடிக்கையோ அவர் மீது எழவில்லை. இது முற்றிலும் வரதராஜனின் தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் இதைப் பெரிதாக்கி, மூத்த தலைவரான அவரை அவமரியாதை செய்யும் வகையில், கட்சித் தலைமை நடந்து கொண்டு விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குமுறுகின்றனர்.
வரதராஜனால் கட்சிப் பெயர் கெட்டு விட்டதாக கட்சித் தலைமை கருதினால், அதை விட மிக மோசமான கெட்ட பெயரை பினரயி விஜயன்தான் ஏற்படுத்தியுள்ளார். கட்சி மீது ஊழல் கரை படிய காரணமாகி விட்டார். ஆனால் விஜயன் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை. அதேசமயம், தனிப்பட்ட பிரச்சினையில் சிக்கி இருந்த வரதராஜனை தேவையில்லாமல் அசிங்கப்படுத்தி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கியது மிகவும் தவறான செயல் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாதிடுகின்றனர்.
ஆனால் வரதராஜனின் மரணம் குறித்து சிஐடியூ தலைவரும், சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினருமான எம்.கே. பாண்டே கூறுகையில், வரதராஜன் மீதான நடவடிக்கை சரியே. கட்சிக்கும், அவரது மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை. முறையாக விசாரணை நடத்திய பின்னர்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் கட்சியின் தவறு எதுவும் இல்லை. அவரது மரணம் துரதிர்ஷ்டசமானது. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேட்டுள்ளார்.
இருப்பினும் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கட்சியின் நடவடிக்கை சரியல்ல என்ற கருத்தைக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications