'சிரிப்பு மனுஷியாகிவிட்ட ஜெயலலிதா'-துரைமுருகன்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசியல்வாதிகள் அறிக்கைகள் விடுவதில் தவறில்லை. ஆனால், விடுகின்ற அறிக்கையில் விபரம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விபரம் அறிந்தவர்கள் விலா நோக சிரிப்பார்கள். அரசியலில் அப்படிப்பட்ட சிரிப்பு மனுஷியாக அதிமுக தலைவர் ஜெயலலிதா ஆகிவிடுவாரோ என்று தோன்றுகிறது.
சட்டமன்றத்தில் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர்தான். அதற்காக அரசின் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்க்க வேண்டும் என்பது பொருள் அல்ல. இன்று ஜெயலலிதா விட்டிருக்கும் அறிக்கை அதற்கோர் உதாரணம்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகம், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் 27.02.2006 அன்று ஒரு தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பை முடக்கும் வண்ணம் கேரள அரசு, கேரள பாசன மற்றும் பாதுகாப்பு (திருத்த) சட்டம் 2006 என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்து, கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு உரிய மரியாதையையும் குறைக்காமல், தமிழ்நாட்டின் உரிமையையும் இழக்காமல், நியாயத்தையும் நிலைநாட்டி, நாகரீகத்தோடு ஒரு தீர்மானத்தை திமுக பொதுக்குழு நிறைவேற்றியிருப்பதை ஜனநாயக உணர்வு கொண்டோர் எல்லாம் பாராட்டும்போது- ஜெயலலிதாவுக்கு மட்டும் இந்த முடிவு எரிச்சலை தந்திருப்பதற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சியே தவிர வேறு அல்ல.
கேரள பாசன மற்றும் பாதுகாப்பு (திருத்த) சட்டம் 2006 என்றோர் சட்டத்தை கொண்டு வந்து சட்டமாக்கியதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்திற்கு போனாராம். அந்த வழக்கை முதல்வர் கருணாநிதி முறையாக நடத்தவில்லை என்றோர் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
31.3.2006 அன்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா ஒரு சிவில் வழக்கை தொடர மனு போட்டாரே தவிர, அந்த மனுவிற்கு ஒரு நம்பரை கூட வாங்கவில்லை. நம்பர் போடாத வழக்கு விசாரணைக்கே வராது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்ததற்கு பிறகுதான் அந்த மனுவிற்கு நம்பர் வாங்கி, அதை நீதிமன்றத்தின் விசாரணைக்கு தகுதியுள்ளதாக்கி, வழக்கையும் நடத்தி வருகிறோம்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வழக்கறிஞர்கள் திறமையான வாதங்களை எடுத்து வைத்து வாதாடினார்களாம். இப்பொழுது வலுவான வாதங்களை எடுத்து வைக்கவில்லையாம் இப்படியும் ஒரு குற்றச்சாட்டை ஜெயலலிதா தன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா காலத்தில் இந்த முல்லைப் பெரியாறு வழக்கில் வாதாடிய அதே வழக்கறிஞரும் சேர்ந்துதான் இப்பொழுதும் தமிழகத்திற்காக வாதாடி இருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் வக்கீல்கள் வாதம் சிறப்பாக இருக்குமாம். தலைவர் கருணாநிதி ஆட்சியில் சிறப்பாக இருக்காதாம். இது என்ன வாதமோ?.
இந்த வழக்கை, அரசியல் சாசன பிரிவின் குழுவிற்கு உச்சநீதிமன்றம் மாற்றியபோது நாம் ஏன் எதிர்க்கவில்லை என்கிறார் ஜெயலலிதா.
ஒரு வழக்கை எந்த பிரிவு “பெஞ்ச்" விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்வது நீதிமன்றத்தின் உரிமை. அதை நாம் எதிர்க்க முடியாது. இந்த வழக்கு இரு மாநில சம்பந்தப்பட்ட பிரச்சனை. இதில் அரசியல் சட்ட சம்பந்தப்பட்ட விவகாரங்களும் அடங்கியிருக்கிறது என்று நீதிமன்றம் கருதினால் அதை அரசியல் சாசன பிரிவு பெஞ்சுக்கு மாற்றும் முழு அதிகாரம் நீதிமன்றத்திற்குதான் உண்டே தவிர அதை எதிர்ப்பதில் எந்த பயனும் இல்லை.
ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெறாவிட்டால், உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிரான கேரள அரசின் சட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக அர்த்தம் ஆகிவிடாதா? என்ற ஒரு கேள்வியையும் ஜெயலலிதா எழுப்பியிருக்கிறார்.
கேரள அரசு பிறப்பித்த சட்டம் சரியா? இல்லையா? என்பதை ஆராய அல்ல இந்த ஐவர் குழு. மீண்டும் அணையின் பலத்தை சோதித்து பார்க்க -நீரின் உபயோகத்தை கண்டறிய என்றுதானே உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. உண்மை இவ்வாறு இருக்க, ஐவர் குழுவில் இடம் பெறாவிட்டால் அது எப்படி கேரள சட்டத்திற்கு ஆதரவாகி விடும்?.
இன்னும் சொல்லப்போனால், இந்த ஐவர் குழுவை வரவேற்றிருக்கிறார் கேரள முதல்வர். அது மட்டுமல்ல, இந்த குழு அமைக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு ரத்தாகிவிட்டது என்றும் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இப்பொழுது புரிகிறதா ஜெயலலிதாவுக்கு, ஐவர் குழு யாருக்கு சாதகம் என்று?.
இந்திய அரசியல் சட்டத்தின் மீது பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட முதல்வர், உச்சநீதிமன்றத்தில் உள்ள அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பை எதிர்க்கலாமா? என்றும் ஜெயலலிதா கேள்வி கேட்டிருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் உள்ள ஒரு “பெஞ்ச்" அல்ல உச்ச நீதிமன்றமே அரசியல் சட்டத்தின் பாதுகாவல் அரண்தான். அந்த உச்சநீதிமன்றம் பெரியாறு அணை பிரச்சனையில் ஒரு தீர்ப்பு சொல்லி, அதை இரண்டு முறை மீண்டும் உறுதி செய்து தீர்ப்பு சொன்ன பிறகும், அந்த தீர்ப்பை முடக்குகின்ற வகையில் கேரள அரசு சட்டசபையில் ஒரு திருத்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டதே அதற்கு கேரள அரசு பெற்றிருக்கின்ற தண்டனை என்ன?.
ஒரு குழுவில் நாம் இடம் பெறுவதும் பெறாது இருப்பதும் நமது விருப்பம்.
நாட்டு நலன் கருதி- குழுவில் இடம் பெறுவதால் ஏற்படும் சாதக-பாதகங்களை எண்ணிப் பார்த்து இது நாம் எடுத்திருக்கின்ற முடிவு, நீதிமன்றத்திற்கு எதிர்ப்பானதும் அல்ல. அதைத்தான் பொதுக்குழு தீர்மானம், நீதிமன்றம் அறிவித்திருப்பதை நாம் மறுக்காவிடினும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்று கண்ணியமாக தெரிவித்திருக்கிறது.
இறுதியாக ஒன்று, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஏதோ ஜெயலலிதா அளவு கடந்த அக்கறை கொண்டவரைப் போலவும், தலைவர் கருணாநிதி உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டவர் போலவும் தன் அறிக்கையில் அடிக்கடி சுட்டிக்காட்டிருக்கிறார்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காக பாரத பிரதமர், கேரள முதல்வர்கள் ஆகியோருடன் எட்டு முறைக்கு மேல் முதல்வர் கலைஞரே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
ஜெயலலிதா தன் ஆட்சி காலங்களில் ஒரு முறையேனும் இப்படி கலந்து உரையாடியது உண்டா? பாரத பிரதமருக்கும் - மத்திய நீர்வளத்துறை, பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கும், முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து 15 முறை கடிதங்களை முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார்.
ஆனால், ஜெயலலிதா எழுதிய கடிதங்கள் மூன்றே மூன்றுதான். இந்த லட்சணத்தில் தலைவர் கருணாநிதி உரிமையை விட்டுவிட்டார் என்று அறிக்கை வேறு விடுகிறார்.
இவ்வாறு கூறியுள்ளார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications