மத்திய அரசு ஊழியர் கருணைத் தொகை ரூ.10 லட்சமாக உயர்கிறது!
டெல்லி: வரும் 26ம் தேதி பட்ஜெட். அன்றைய தினம் பல சலுகைகள் காத்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் இப்போதே குறிப்பு தரத் துவங்கியுள்ளனர்.
குறிப்பாக அரசு ஊழியர்கள் மகிழ நல்ல செய்திகள் உள்ளன. அதில் முக்கியமானது மத்திய அரசு ஊழியர்கள் பெறும் கருணைத் தொகை.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது ரூ 3.5 லட்சம் கருணைத் தொகையாக பெறுகிறார்கள். இதை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மருத்துவச் செலவுத் தொகையில் 15 ஆயிரம் ரூபாயை வருமான வரிக்காக கழித்துக் கொள்ளலாம் என்பது நடைமுறையில் உள்ளது. இந்தத் தொகையும் ரூ.50 ஆயிரம் வரை கணிசமாக உயரும் என்று தெரிகிறது.
அதுபோல மத்திய அரசு ஊழியர்களின் போக்குவரத்து படியும் உயர வாய்ப்புள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலக பொருளாதார தேக்க நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த சலுகைகளை பிரணாப் முகர்ஜி திரும்பப் பெறுவார் என்று கூறப்படுகிறது. இதனால் மறைமுக வரி விதிப்புகள் பட்ஜெட்டில் அதிகமாக இடம் பெறக்கூடும்.
மக்களிடம் ஓட்டுக் கேட்டுப் போக வேண்டிய நிலைக்குத் தள்ளும் தேர்தல் எதுவும் இந்த ஆண்டு வராது என்ற நிலை உள்ளதால், பல்வேறு மானியக் குறைப்பு உள்ளிட்ட நிதிக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தும் சில நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கலால் வரியும், சேவை வரியும் கட்டாயம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியும், தொழில் துறையில் உள்ளவர்களுக்கு கடுப்பையும் ஏற்படுத்தும் பட்ஜெட்டைத்தான் இந்த ஆண்டு பிரணாப் முகர்ஜி சமர்ப்பிக்க இருப்பதாக நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications