ஜெயலலிதாவின் ஏட்டிக்குப் போட்டி-கருணாநிதி தாக்கு

அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை:
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான உ.ரா. வரதராசன் மறைவு குறித்து?
பதில்: அருமைத் தோழர் உ.ரா. வரதராசன் நம் மத்தியிலே அவரது தொண்டுள்ளத்தையும் கொள்கை உறுதியையும் மக்கள் பணியையும் அன்பான நட்பு, அரசியல் நாகரிகம் ஆகியவற்றையும் நினைவு அலைகளாக மிதக்க விட்டுவிட்டு பிரிந்துவிட்டார், ஆம் மறைந்து விட்டார்.
தமிழகத்திலே கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர்களில் ஒருவராக குறிப்பாக தொழிற்சங்கத் தலைவராகத் தொண்டாற்றியவர். அதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் இருந்தவாறு கட்சிப் பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தபோது அந்தக் கட்சியின் முதுபெரும் தலைவர் சுர்ஜித்தை உடல் நலம் விசாரிக்க அவர் இல்லம் செல்லும்போதெல்லாம் - அங்கு என்னை வரவேற்கத் தயாராக காத்திருப்பவர்- உடன் இருந்து என்னை வழியனுப்பும் வரை- இந்திய நாட்டு அரசியல் நிலவரங்களையும் அவரது கட்சிப் பணிகளையும் விவரமாக விவரித்து விவாதிப்பவர்.
அவர் 1990ம் ஆண்டில் தமிழகச் சட்டப்பேரவையில் வில்லிவாக்கம் தொகுதியினுடைய உறுப்பினராக வீற்றிருந்தபோது- பேச எழுந்திருப்பாரேயானால் அவரிடமிருந்து ஆரோக்கியமான கருத்துகள், ஆலோசனைகள் வெளிவரும் என்று நான் ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன். என் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் இல்லாமல் அரசின் சார்பில் நடைபெற வேண்டிய செயல்களைக் கவனமூட்ட என்றைக்குமே அவர் தவறியதில்லை.
ஒருமுறை கழக அரசைப் பற்றிக் கூறும்போது குறிப்பாக என்னைச் சுட்டிக்காட்டி, எனக்குப் பொதுவுடைமை கொள்கையின்பால் உள்ள பற்று, பாசத்தை விளக்கியதோடு நில்லாமல் அப்படி விளக்கியதற்கே காரணமாக சென்னை மாநகரில் மே தினச் சின்னம் ஒன்றை அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மே தின விழாவைக் கொண்டாடுவதற்கு அறிவிப்பு செய்த திமுக அரசைப் பாராட்டிவிட்டு, அதன் தொடர்பாகத்தான் அந்த வேண்டுகோளையும் அவையின் முன் வைத்தார்.
நான் பதில் அளித்தபோது, அவரது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சொன்ன நேரத்தில் அவர் முகம் மலர்ந்த காட்சி இன்னமும் என் நினைவிலே இருக்கிறது.
அவருடைய கருத்தையேற்று, அப்போதே மாற்றம் பெற்றதுதான் நேப்பியர் பூங்கா என்றிருந்த இன்றைய மே தினப் பூங்கா. அந்தப் பூங்காவில் மே தினச் சின்னமும்- மே தின முழக்கமும் அமைக்கப் பெற்று ஆண்டு தோறும் நம்முடைய கழகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் அந்தப் பூங்காவிற்குச் சென்றுதான் மே தின வாழ்த்துக்களை முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மே தின பூங்கா திறப்பு விழா அந்த ஆண்டு மே 1ம் தேதியன்று நடைபெற்றது. அப்போது நடைபெற்ற திமுக பாட்டாளிகளின் பேரணியில் அவரும் கலந்து கொண்டு எழுச்சி மிகுந்த உரை ஒன்றினை ஆற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டது- கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோன்ற மே தின நினைவுச்சின்னம் ஒன்றை அமைக்க வேண்டுமென்று நான் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இப்போது திமுக ஆட்சியில்தான் நிறைவேறியிருக்கிறது. அதற்காக முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்பதாகும்.
இப்படியெல்லாம் ஆக்கபூர்வமான கருத்துக்களைச் சொல்கிற ஆற்றலாளர் அவர்.
அவர் இன்று மறைந்துவிட்டார்- அவர் மறைவையொட்டிய கேள்விக்குறி இன்னமும் மறையவில்லை- அவர் மத்திய தர மக்களிடமும் பாட்டாளி வர்க்கத்தினரிடமும் பெற்றிருந்த பேரும் புகழும் பெரும் கீர்த்தியும் மறையவில்லை -என்றைக்கும் மறையாது!.
கேள்வி: நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறதே, அதைப்பற்றி?
பதில்: தொடர் தொடங்குவதற்கு முன்பே அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து பிரதமரும், சபாநாயகரும் பேசியிருப்பதும்- அமைதியாக மன்றத்தை நடத்திச் செல்ல ஒத்துழைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.
நாடாளுமன்றத்தை நடக்கவிடமாட்டோம் என்று சில கட்சிகள் சபதம் செய்ததும்- அதை நடைமுறையில் நிலைநாட்டுவதும்- ஜனநாயகத்தை மலரச் செய்யாது. மக்கள் வாக்களித்து அனுப்பியிருப்பது அவர்கள் வாழும் பகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நல்லது நடக்கும் என்பதற்காகத்தான்.
இப்போது தொலைக்காட்சிகளில் நாடாளுமன்ற காட்சிகளைக் காண்போர் ஜனநாயகத்தைப் பற்றிய நம்பிக்கையை இழந்து விடக்கூடிய சூழ்நிலை உருவாவதை உறுப்பினர்கள்தான் தவிர்க்க வேண்டும்.
கேள்வி: மதிமுகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து யானை மலையை உடைத்து சிற்பக்கலை நகரம் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மார்ச் 4ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்களே?
பதில்: மதுரைக்கு அருகிலே உள்ள யானை மலையை குடையும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், அரசின் சார்பில் அவ்வாறு எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்றும் தெளிவாக அந்தத் துறையின் அமைச்சர் தம்பி தங்கம் தென்னரசு அறிக்கை மூலமாக நேற்றைய தினமே வெளியிட்டுள்ளார். ஆனால் அதற்குப் பிறகும் அந்தக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் அல்லவா? யாரோ அறிக்கைவிட்டு அழைக்கிறார்கள் என்பதற்காக இன்னமும் பகுத்தறிவைப் பயன்படுத்த தவறாத பாண்டியன் போன்றவர்கள் அவர்களோடு சேர்ந்து கொண்டு 'யானைமலை சலோ சலோ' என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
கேள்வி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை குறித்து அதன் வலுவினை அறிய மீண்டும் ஒரு குழு ஐந்து பேரைக் கொண்டு அமையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதையும்- அந்தக் குழுவில் ஐவரில் ஒருவராக இணைந்து கருத்து தெரிவிப்பதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்றும் திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு சிலர் கண்டனம் தெரிவித்து உங்களைத் தாக்கி அறிக்கை விடுத்திருக்கிறார்களே?
பதில்: நான் கேள்விப்பட்ட வரையில் எனக்கு வந்த செய்தி வருமாறு:
திமுக பொதுக்குழுவில் முல்லைப் பெரியாறு அணை குறித்து உச்ச நீதிமன்றம் அமைக்கும் குழுவில் ஐவரில் ஒருவராக திமுக சார்பிலும் இடம் பெறக்கூடும் என்று நினைத்துக்கொண்டு- அதை வன்மையாகக் கண்டித்து ஒரு நீண்ட அறிக்கை தயாரித்து வைத்திருந்தார்களாம். அதற்கு வாய்ப்பு இல்லாமல், திமுக பொதுக்குழு அந்த ஐவர் குழுவிலே இடம் பெறுவதில்லை என்று அறிவித்துவிட்டதால், ஏமாற்றமடைந்து அவசர அவசரமாக முதலில் தயாரித்து வைத்திருந்த நீண்ட அறிக்கையைத் தூக்கிப்போட்டுவிட்டு, கழகப் பொதுக்குழுவின் தீர்மானத்தைக் கண்டனம் செய்து புதிய அறிக்கையை வெளியிட்டார்களாம்.
இப்படி எதிலும் ஏட்டிக்குப் போட்டிதான் இன்றைய எதிர்க்கட்சியின் பண்பாடு என்பதை பொது மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications