மெல்போர்ன் வீதிகளில் இந்தியர்களுக்கு பாதுகாப்பில்லை: ஆஸி எதிர்க்கட்சித் தலைவர்
மெல்போர்ன்: மெல்போர்ன் நகர வீதிகள் இந்தியர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் டோனி அபாட் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் இருதரப்பு உறவுகளை கடுமையாக பாதித்துள்ளது.
ஆஸ்திரலேயாவில் இந்தியர்கள் தாக்கப்படும் செய்திகள் இந்திய மீடியாக்கள் மிகைப்படுத்தி வெளியிடுவதாக ஆஸ்திரேலிய தரப்பில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் பிரபல மீடியா நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 25 செய்தியாளர்கள் ஆஸ்திரேலிய பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
மெல்போர்ன் மற்றும் சிட்னியில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசை நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த செய்தியாளர்களின் பல்வேறு வசதிகளுக்காக ஆஸ்திரேலிய அரசு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் செலவிட திட்டமிட்டுள்ளது.
அதாவது இந்திய செய்தியாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் டாலர்கள் செலவிடப்பட உள்ளது. செய்தியாளர்கள் தங்குவதற்கு அதிநவீன மற்றும் சொகுசான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இனவெறி தாக்குதல் தொடர்பாக இருநாட்டு உறவுகள் பலவீனமடைந்துள்ள காரணத்தால், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அதிகாரிகள், இவ்வளவு அதிகமாக செலவழித்து இந்திய மீடியாக்களை வசீகரிக்க முயற்சிப்பதாக ஆஸ்திரேலியாவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதை விட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் இந்திய மீடியாக்களை தேவையில்லாமல் குளிர்வித்து குறுக்குவழியில் பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் டோனி அபாட் உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,
'மெல்போர்ன் நகர வீதிகள் இந்தியர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. இனவெறி தாக்குதல்கள் நடக்காமல் தடுப்பதன் மூலமும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் ஏற்பாடுகள் செய்வதற்கு பணத்தை செலவழிக்க வேண்டும்.
பாதுகாப்பு தான் இங்கு முக்கியமானதும், அடிப்படையானதுமான பிரச்னை. இதை உறுதிப் படுத்துவதன் மூலமாகவே இருதரப்பு உறவுகள் மேம்படும்.
நமது வீதிகள் உண்மையில் பாதுகாப்பானதாக இல்லை. குறிப்பாக மெல்போர்ன் நகர வீதிகள். இங்கு போலீசார் அதிக கண்காணிப்பில் இருந்திருக்க வேண்டும்.
அப்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்திருந்தால், இனவெறி தாக்குதல்களும் தடுக்கப்பட்டிருக்கும். இருநாட்டுக்கு இடையே மக்கள் தொடர்பும் பாதிக்கப்பட்டிருக்காது' என்றார்.












Click it and Unblock the Notifications