யானைமலையை குடையும், உடைக்கும் திட்டமில்லை- தமிழக அரசு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அன்றாடம் ஒரு ஆர்ப்பாட்டத்தையோ -போராட்டத்தையோ நடத்தாவிட்டால் அ.தி.மு.க. என்று ஒரு கட்சி தமிழகத்திலே இருக்கிறது என்று மக்களுக்குத் தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக, "கொசு கடிக்கிறது'' - "ஈ மொய்க்கிறது'' என்றெல்லாம் காரணம் கூறி - ஜெயலலிதா தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளாகத் தேர்ந்தெடுத்து நடத்துகிறாரோ இல்லையோ, அன்றாடம் அதற்காக ஒரு அறிக்கையை தட்டச்சு செய்து கொடுக்கிறார்கள்.
நாளுக்கு நாள் அதற்கு செல்வாக்கு குறைந்து வருவதை அறிந்து, தானே ஆர்ப்பாட்டத்திலே கலந்து கொள்கிறேன் என்று கூறி, அதுவும் காரிலே சென்றால் மக்கள் கண்களிலே பட நேரிட்டுவிடும் என்பதற்காக - விழுப்புரத்திற்குச் ஹெலிகாப்டரிலே சென்று திரும்பி இருக்கிறார்.
அம்மாவின் கட்சியோடு நாங்களும் தோழமையாக இருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவாவது - என்ன விவரம் என்று தெரிந்து கொள்ளாமலேயே - உண்மை புரியாமலேயே ஒரு கட்சி "மதுரைக்கு அருகில் உள்ள யானை மலையை உடைத்து நொறுக்கப் போகிறீர்களா, இதோ ஆர்ப்பாட்டம்'' என்று அறிவிப்பு வெளியிட்டது. இன்னொரு கட்சி உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளரோ - இன்னும் ஒருபடி மேலே போய் யானை மலையிலே சிகப்பு கிரானைட் கற்கள் இருப்பதாகவும், அந்தக் கற்களை எடுத்து விற்று பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தைக் குவிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதில் பெரும் பணம் அரசின் கருவூலத்திற்கு வரப்போவது இல்லையென்றும் தனது கற்பனா சக்திக்கேற்றவாறு அறிக்கை விடுத்திருக்கிறார்.
யானை மலையை குடைந்து சிற்ப நகரம் உருவாக்குவதாக அரசின் சார்பில் எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை என்று மதுரையிலே தலைமைச் செயலாளரே அறிவித்திருக்கிறார்.
அரசின் சார்பில் இதுபோல் செய்யப்போவதாக எந்தவிதமான அறிவிப்பும் சொல்லப்படவில்லை.
யானை மலையில் சிற்ப நகர் ஒன்றினை உருவாக்க முடியும் என்று "பெரும் தச்சர் அவையம்'' என்ற ஒரு அமைப்பு வைத்த கோரிக்கையின் அடிப்படையில் - அந்தக் கோரிக்கையை பூர்வாங்கமாகப் பரிசீலனை செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு - அந்தக் குழு இன்னமும் தன்னுடைய அறிக்கையைக் கூடத் தராத நிலையில் - அதுபற்றி எந்தவிதமான கருத்தும் அரசின் சார்பில் அறிவிக்கப்படாதபோது - யாரோ ஒரு உறுப்பினர் வெளியிட்ட செய்தியை அப்படியே நம்பிக் கொண்டு - அந்தப் பகுதி மக்களைத் தூண்டிவிட்டு அரசுக்கு எதிராகச் செயல்பட வைக்க வேண்டுமென்பதற்காகவே - இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக் கொண்டு - ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்றெல்லாம் ஒரு சில அரசியல் கட்சிகள் அறிவித்திருப்பது -தாங்கள் இருப்பதை உலகத்திற்குக் காட்டிக் கொள்வதற்காகவே தவிர வேறல்ல.
அரசின் சார்பில் முதல்-அமைச்சரோ அல்லது நானோ, அல்லது அரசு அதிகாரிகளோ யானைமலையை உடைக்கவோ -குடையவோ திட்டமிடவில்லை என்பதையும் - அதற்காக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்றெல்லாம் அறிவித்து மக்களை திசை திருப்பும் முயற்சியிலே ஈடுபட்டிருப்பதை அந்தப் பகுதி மக்கள் யாரும் நம்ப வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க. அரசைப் பொறுத்தவரையில், மக்கள் விரும்பாத எந்தக் காரியத்தையும் எந்தக் காலத்திலும் செய்யாது என்பதைத் தெரிவிப்பதோடு - நமது முதல்-அமைச்சர் கருணாநிதி அப்படிப்பட்ட செயல்களுக்கு எந்தக் காலத்திலும் அனுமதி வழங்க மாட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications