கலவரத்தில் 11 நாள் குழந்தை சாவு: காஷ்மீர் சட்டசபையில் கூச்சல், குழப்பம்
ஸ்ரீநகர்: கலவரக்காரர்களின் வன்முறையால், பிறந்து 11 நாட்களே ஆன குழந்தை பலியானது குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் காஷ்மீர் சட்டசபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
காஷ்மீர் மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே தொடங்கியது. அளுநர் என்.என்.வோரா உரையுடன் நேற்று சட்டசபை நடவடிக்கைகள் தொடங்கின.
கூட்டத்தொடரை அமைதியாக நடத்த வேண்டும் என சபாநாயகர் முகமது லோன் அனைத்துக்கட்சிகளையும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று அவையில் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி தனது கட்சியின் 21 உறுப்பினர்களுடன் எழுந்து பிரச்னையை கிளப்பினார்.
பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் வன்முறைக் கும்பலின் தாக்குதலால், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த நிஷார் அகம்மது- குல்சுமா தம்பதியரின், பிறந்து 11 நாட்களே ஆன குழந்தை இர்பான் அகமது பலியான சம்பவம் குறித்து உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர்.
கேள்வி நேரம் முடிந்த பின்னர் இப்பிரச்னை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் படும் என சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
குழந்தை பலியான விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி அவையில் இருந்து வெளியேறினர்.












Click it and Unblock the Notifications