டபிள்யூ. ஆர். வரதராஜன் உடல் தகனம்- தலைவர்கள் அஞ்சலி
சென்னை: மறைந்த சிபிஎம் மூத்த தலைவர் டபிள்யூ.ஆர். வரதராஜன் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக அவரது உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 11ம் தேதியன்று இரு கடிதங்களை எழுதி வைத்து விட்டு காணாமல் போனார் வரதராஜன். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 13ம்தேதி, அதாவது வரதராஜன் காணாமல் போனதற்கு மறு நாள், போரூர் ஏரியிலிருந்து ஒரு அடையாளம் தெரியாத உடல் மீட்கப்பட்டது. அழுகிய நிலையில் உடல் இருந்ததால் அடையாளம் காண முடியாமல் இருந்தது.
இதையடுத்து அந்த உடல் குறித்து சென்னை போலீஸாருக்குத் தகவல் கிடைத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த உடல் வரதராஜனின் உடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது மனைவி சரஸ்வதியை அழைத்து அடையாளம் காண முயற்சித்தனர். உடலைப் பார்த்த சரஸ்வதி, அது தனது கணவரின் உடல்தான் என்று உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் மரபணு சோதனைகள் மூலமே இந்த மரணத்தை உறுதிப்படுத்திச் சொல்ல முடியும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விஞ்ஞான ரீதியாக கைரேகை மூலமாகவும், டி.என்.ஏ. பரிசோதனை செய்து தடய அறிவியல் ரீதியாகவும் உரிய சோதனை நடத்தி அதன்மூலம் நிரூபணம் ஆனபிறகுதான், அதிகாரப்பூர்வமாக வரதராஜனின் உடல் என்பதை அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதையடுத்து முதலில் கைரேகை பரிசோதனை செய்யப்பட்டது. வரதராஜன் அமெரிக்கா சென்றபோது அவரது கைரேகையை சென்னை அமெரிக்க தூதரகத்தில் எடுத்து வைத்து இருந்தனர். அந்த கைரேகை நகலை வாங்கி, தற்போது கைப்பற்றப்பட்ட பிணத்தின் கைரேகையோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
அந்த சோதனையில் இரண்டும் ஒன்றுதான் என்பது தெரிய வந்தது. கைரேகை அடிப்படையில் அந்த உடல் வரதராஜனின் உடல்தான் என்பது நிரூபணமாகி விட்டது என்று சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் நேற்று மாலை தெரிவித்தார். இருந்தாலும் டி.என்.ஏ. பரிசோதனையும் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
வரதராஜனின் உடல்தான் என்பது முதல் கட்டமாக உறுதி செய்யப்பட்டதால், நேற்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் வயிறு நிறைய தண்ணீர் இருந்தது தெரிய வந்தது. மூச்சுத் திணறி அவர் இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. உடலில் காயம் ஏதும் இல்லை. எனவே இது தற்கொலையாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
இருப்பினும் அவரது வயிற்றில் இருந்த தண்ணீரை சோதனைக்காக எடுத்துள்ளனர். இந்த நீரையும், போரூர் ஏரித் தண்ணீரையும் பரிசோதிக்கவுள்ளனர். இரண்டும் ஒன்று என்று நிரூபிக்கப்பட்டால்தான், இது தற்கொலை என்ற முடிவுக்கு டாக்டர்களும், போலீஸாரும் வருவார்கள்
இந்த நிலையில் பிரேதப் பரிசோதனை முடிந்ததைத் தொடர்ந்து வரதராஜனின் உடல் அவரது மனைவி சரஸ்வதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அங்கிருந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் வேன் மூலம் அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், பொதுமக்கள் வரதராஜன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு வரதராஜன் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை 3 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் இறுதி ஊர்வலம் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டை சென்றடைந்தது. அங்கு வரதராஜன் உடல் தகனம் செய்யப்பட்டது.
சிபிஎம் இரங்கல்
முன்னாக வரதராஜன் மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்த அறிக்கையில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உன்னதமான தலைவர்களில் ஒருவரும், மிகச்சிறந்த போராளியும், சிஐடியு தலைவருமான டபிள்யூ.ஆர்.வரதராஜன் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மறைந்த டபிள்யூ.ஆர்.வரதராஜனின் உடல் கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்படும். அதன் பின்னர் இறுதி நிகழ்ச்சி மாலை 3 மணி அளவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
டபிள்யூ.ஆர்.வரதராஜன் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், சிஐடியு அகில இந்திய செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயல்பட்டவர்.
சென்னை நகரத்திலும், அகில இந்திய அளவிலும் பல தொழிற்சங்கப் போராட்டங்களில் தலைமையேற்று செயல்பட்டவர். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். அவருடைய மறைவு கம்யூனிஸ்டு இயக்கத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சி கொடியை மூன்று தினங்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் கடைபிடிக்குமாறு கட்சி அணிகளை தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் காரத் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
டபிள்யூ.ஆர்.வரதராஜன் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். கட்சி மற்றும் தொழிற்சங்க வளர்ச்சிக்கு அவர் பெரிதும் பாடுபட்டவர். அவர் உயிரிழந்த விதம் எங்கள் அனைவருக்கும் வலியும், வேதனையும் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை வரலாறு..
டபிள்யூ.ஆர்.வரதராஜன் 9.7.1945 அன்று, வட ஆற்காடு மாவட்டம் உள்ளியநல்லூர் கிராமத்தில் பிறந்தார்.
சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், மொழிப் பெயர்ப்பாளர், பார்வதிபுரம் என்ற நாவலை எழுதி சர்வோதாய இயக்கத்தின் பரிசினைப் பெற்றவர். அருவி என்ற இலக்கிய சிற்றிதழையும் மாணவப் பருவத்திலேயே நடத்தியுள்ளார்.
1967-ம் ஆண்டு ரிசர்வ் வங்கிப் பணியில் சேர்ந்த அவர் 17 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்தார்.
1984-ம் ஆண்டு, வங்கிப் பணியைத் துறந்து, கட்சியின் முழுநேர ஊழியரானார். சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். 1989-ம் ஆண்டு, நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராக வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சிஐடியு மாநிலச் செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த அவர், சிஐடியுவின் அகில இந்திய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர் டெல்லி தொழிற்சங்கப் பணிக்காக சென்ற பிறகு கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இவருடைய மனைவி சரஸ்வதி ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி ஊழியர். இவர்களது திருமணம் மறுமணம், கலப்புத் திருமணமாகும். இந்தத் தம்பதிக்கு அமுதன் என்ற மகனும், பிரஷாந்த் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர்.
கருணாநிதி இரங்கல்
இதற்கிடையே, வரதராஜன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
வரதராஜனின் தொண்டுள்ளமும், கொள்கை உறுதியும், அரசியல் நாகரீகமும் கொண்டவர். அரசின் சார்பில் நடைபெற வேண்டிய செயல்களை கவனமூட்ட என்றைக்குமே வரதராஜன் தவறியதில்லை.
சென்னை மாநகரில் நேப்பியர் பூங்காவை மேதினப்பூங்கா என மாற்றி அமைக்க அவர் வலியுறுத்தயதை ஏற்று அதனை மேதினப்பூங்கா என மாற்றி அமைக்கப்பட்டு மேதினச் சின்னமாகவும் அமைக்கப்பட்டது.
வரதராஜன் இன்று மறைந்து விட்டாலும், மத்திய தர மக்களிடமும், பாட்டாளி வர்க்கத்திடமும் அவர் பெற்ற பேரும் புகழும் பெரும் கீர்த்தியும் என்றைக்கும் மறையாது என்று தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி:
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டபிள்யூ.ஆர்.வரதராஜன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்த ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
வரதராஜனின் மரணம் தொழிற்சங்க இயக்கங்களுக்கு பேரிழப்பு என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications