• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மீண்டும் தலை தூக்குகிறது சீக்கிய தீவிரவாதம் - ஆட்களை திரட்டுவதாக உளவுத்துறை தகவல்

  By Staff
  |
  Khalistan Flag
  சண்டிகர்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலின் பேரில் சீக்கிய தீவிரவாத அமைப்புகள் மீண்டும் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையுடன் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

  இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தீவிரவாத செயல்களில் சீக்கிய தீவிரவாதிகள் ஈடுபட்டு விடாமல் தடுக்க உஷார் நிலையில் பாதுகாப்புப் படையினர் வைக்கப்பட்டுள்ளனர்.

  1993ம் ஆண்டுடன் பஞ்சாபை ஆட்டிப் படைத்து வந்த தீவிரவாத செயல்கள் கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. அதுவரை தினசரி குண்டுவெடிப்புகள், தீவிரவாதத் தாக்குதல்களால் சிக்கித் திணறிக் கொண்டிருந்த பஞ்சாப் அமைதிக்குத் திரும்பியது.

  ஆனால் தற்போது மீண்டும் அங்கு தீவிரவாதம் தலை தூக்குவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கு தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மாபெரும் அநீதியை இழைத்து வருவதாக சீக்கியர்கள் குமுறிக் கொண்டுள்ளனர்.

  இந்த நிலையில்தான் சமீபத்தில், இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்ற பியாந்த் சிங், கேஹர் சிங் உள்ளிட்டோரின் படங்களுக்கு கெளரவம் செய்து, தியாகிகளாகப் போற்றி நியூசிலாந்தில் உள்ள குருத்வாரா மரியாதை செய்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்தப் பின்னணியில் பஞ்சாபில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், சீக்கிய தீவிரவாத அமைப்புகள் அணி திரண்டு கொண்டிருப்பதாக பதட்டமூட்டும் செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

  பாகிஸ்தானிலும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உள்ள சீக்கிய அமைப்புகள் சில மீண்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபட ஆட்களைத் திரட்டத் தொடங்கியிருப்பதாக உள்துறை எச்சரித்துள்ளது.

  கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் உயர் அதிகாரிகளை, பப்பர் கல்சா சர்வதேச அமைப்பின் தலைவர் வாத்வா சிங் சந்தித்துப் பேசியுள்ளது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

  இதுகுறித்து பஞ்சாப் மாநில உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பஞ்சாபில் மீண்டும் வன்முறையை அரங்கேற்ற பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ களம் இறங்கியுள்ளது. இந்தப் பொறுப்பை வாத்வா சிங்கிடம் அது ஒப்படைத்துள்ளது.

  இதைத் தொடர்ந்து பஞ்சாபில் சீக்கிய இளைஞர்களைத் திரட்டும் வேலையில் வாத்வா சிங் ஈடுபட்டுள்ளார். மேலும், அமெரிக்காவிலிருந்தும் ஆட்களை திரட்டத் தொடங்கியுள்ளார். மலேசியா அல்லது சிங்கப்பூர் வழியாக பஞ்சாபுக்குள் நுழைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.

  இந்தத் தகவலைத் தொடர்ந்து பஞ்சாபில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. முக்கிய விஐபிகளுக்கும், முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் சீக்கிய தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

  பிட்டு, பஞ்சாப் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இவர் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார். பியாந்த் சிங்கும், முன்னாள் டிஜிபி கேபிஎஸ் கில்லும் சேர்ந்துதான் பஞ்சாபை விட்டு 1993ல் தீவிரவாதத்தை வேரோடு விரட்டியடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  1995ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பியாந்த் சிங் மனித வெடிகுண்டுக்குப் பலியானார்.

  பிட்டுவை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை என்ற தீவிரவாத அமைப்பு குறி வைத்திருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.

  அதேபோல அமிர்தசரஸில் உள்ள கோவில்கள், நங்கல் அணை, ரோபார், லூதியானா, பதன்கோட் ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களையும் தீவிரவாதிகள் தகர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

  இதுகுறித்து பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில், இது எதுவும் நடைபெறாமல் தடுப்போம். மீண்டும் இங்கு தீவிரவாதம் தலையெடுக்க விட மாட்டோம்.

  உளவுத்துறை தகவல்களை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். தினசரி கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளோம். கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் அதை பலப்படுத்தியுள்ளோம் என்றார்.

  பஞ்சாபில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கவிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு இடங்களில் பெருமளவிலான வெடிகுண்டுகள், ஆயுதங்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

  ஜனவரி 19ம் தேதி பாட்டியாலாவின் நாபா நகரில் உள்ள இந்தியன் ஆயில் எரிவாயு கிட்டங்கி அருகே பெருமளவிலான வெடிபொருட்கள் சிக்கின. அதற்கு ஐந்து நாட்கள் கழித்து சண்டிகர் அருகே உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு அரேக 2 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

  அதேபோல, லூதியானாவின் ஹல்வாரா நகரில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்திற்கு வெளியே ஒரு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது.

  நேற்று முன்தினம் பாட்டியாலாவில் எட்டு கிலோ வெடிபொருட்கள், 40 ஜெலட்டின் குச்சிகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

  பப்பர் கல்சா சர்வதேச அமைப்பின் தலைவராக செயல்பட்டு வரும் வாத்வா சிங், அந்த அமைப்பின் துணைத் தலைவர் மஹல் சிங் உள்ளிட்ட 20 பேரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஏற்கனவே பாகிஸ்தானிடம் இந்தியா கோரியுள்ளது நினைவிருக்கலாம்.

  இந்த நிலையில்தான் மீண்டும் பஞ்சாபை கதிகலங்க வைக்க தீவிரவாதிகள் சதி செய்து வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

  காலிஸ்தான் இயக்கம் - ஒரு பார்வை ...

  இந்தியப் பிரிவினை நடந்தபோது, மத அடிப்படையில் ஒருங்கிணைந்த பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவுக்கும், இன்னொரு பகுதி பாகிஸ்தானுக்கும் போனது.

  ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலத்தில், சீக்கியர்கள் அப்போது பெரும்பான்மை வகுப்பினராக இல்லை. இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக இருந்தனர்.

  பஞ்சாப் பிரதேசத்தில் இருந்த முக்கிய மூன்று மதத்தினரான இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்களில் லூதியானா மாவட்டத்தில் மட்டும்தான் சீக்கியர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்.

  இந்த நிலையில் பிரிவினைக்காக இந்துக்களையும், சீக்கியர்களையும் ஒரே குழுவாக அறிவித்தது வெள்ளையர் அரசு.

  ஆனால் பஞ்சாபை பிரிக்கக் கூடாது, பாகிஸ்தானை உருவாக்கக் கூடாது என்று சீக்கியர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர்.

  1909ம் ஆண்டு மின்டோ - மார்லி சீர்திருத்த குழுவிடம் இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் பல்வேறு கோரிக்கைளை அளித்தனர். அப்போது முஸ்லீம்கள் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தினர்.

  அப்போதுதான் முதல் முறையாக பாகிஸ்தான் என்ற நாட்டை முஸ்லீம்களுக்காக உருவாக்கினால், அதே பாணியில் சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சீக்கியர்கள் மின்டோ - மார்லி கமிட்டியிடம் முன்வைத்தனர்.

  இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் ஆகிய மூன்று முக்கிய மதக் குழுக்களுடன் வெள்ளையர் அரசு நீண்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.

  இந்த நிலையில் சீக்கியர்களை சாந்தப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சி தீர்மானம் கொண்டு வரவிருப்பதாக அறிவித்தார் மகாத்மா காந்தி.

  1946ம் ஆண்டு நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போது, காந்தியின் உறுதிமொழியை முன்மொழிந்தார் நேரு. மேலும், சீக்கிய மக்கள் தங்களது பகுதியில் சுயாட்சி அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள் என்றும் கூறினார் நேரு.

  நேருவின் வாக்குறுதியை நம்பினார்கள் சீக்கியர்கள். இதையடுத்து தனி காலிஸ்தான் கோரிக்கையை அவர்கள் அப்போதைக்கு வலியுறுத்தவில்லை. இதையடுத்து 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி இந்திய அரசியல் நிர்ணயச் சபையில் இதுதொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

  ஆனால் பின்னர் நேரு திடீரென தனது நிலையிலிருந்து பின் வாங்கினார். ஒருங்கிணைந்த இந்தியாவின் நலனையும், பலத்தையும் கருத்தில் கொண்டு, முன்பு உருவாக்கப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார் நேரு. இது சீக்கியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

  நேரு துரோகம் செய்து விட்டார் என்று குமுறல்கள் வெடித்தன.

  இந்த சமயத்தில் 1947ம் ஆண்டு, இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இந்திய அரசின் மூத்த அதிகாரியாக இருந்து வந்த கபூர் சிங் என்பவர் ஊழல் புகார் சாட்டப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

  டிஸ்மிஸ் செய்யப்பட்டவுடன் அவர் துண்டுப் பிரசுரம் ஒன்றை அச்சடித்து பஞ்சாப் முழுவதும் விநியோகித்தார்.

  அதில், அப்போதைய பஞ்சாப் ஆளுநர் சந்துலால் திரிவேதி மூலமாக, பிரதமர் நேருவும், துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேலும், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அதில், சீக்கியர்களை குற்றப் பரம்பரையினராக கருதுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் என்று கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதேபோல ஜலந்தர் லயல்பூர் கல்சா கல்லூரி முன்னாள் முதல்வர் பிரீத்தம் சிங் கில் என்பவரும், சீக்கியர்களையும், பஞ்சாபி மொழியையும், கலாச்சாரத்தையும், இனத்தையும் அழிக்க இந்துக்கள் பெரும் சதித் திட்டம் தீட்டி நடந்து கொண்டனர் என்று பின்னாளில் குறிப்பிட்டிருந்தார்.

  இப்படித்தான் காலிஸ்தான் கோரிக்கை ஆரம்பத்தில் எழுந்து, நடுவில் தளர்ந்து, பின்னர் மீண்டும் வீறு கொண்டெழத் தொடங்கியது.

  பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், பஞ்சாபி பேசும் மக்கள் அதிகம் உள்ள குஜராத், ராஜஸ்தான் பகுதிளை உள்ளடக்கிய சீக்கிய சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் காலிஸ்தான் இயக்கத்தின் முக்கிய நோக்கம்.

  70களிலும், 80களிலும் இது மாபெரும் இயக்கமாக உருவெடுத்தது. பின்னாளில் அது தீவிரவாத இயக்கமாக மாறிப் போனது.

  1971ம் ஆண்டு காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தீவிரமாக முழங்கி வந்தவர்களில் முக்கியமானவரான ஜகஜித் சிங் செளஹான், அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு நியூயார்க் டைம்ஸ் இதழில் காலிஸ்தான் நாடு உருவாக்கப்படவிருப்பதாக பெரிய விளம்பரம் கொடுத்தார்.

  இதையடுத்து தனி காலிஸ்தான் நாடு போராட்டத்துக்காக நிதிகள் குவியத் தொடங்கின.

  1980ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி இந்திரா காந்தியை சந்தித்தார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து அனந்த்பூர் சாஹிப்பில், தேசிய காலிஸ்தான் கவுன்சிலை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார்.

  அதன் தலைவராக தன்னையும், பொதுச் செயலாளராக பல்பீர் சிங் சந்துவையும் அறிவித்தார்.

  1980ம் ஆண்டு மே மாதம் செளஹான் லண்டன் சென்றார். அங்கு காலிஸ்தான் உதயமானதாக அறிவித்தார். அதேபோன்ற அறிவிப்பை அமிர்தசரஸில் வைத்து சந்து அறிவித்தார். அத்தோடு, காலிஸ்தான் நாட்டுக்கான தனி ரூபாய் நோட்டு, ஸ்டாம்புகள் ஆகியவற்றையும் வெளியிட்டார் சந்து.

  இருப்பினும் செளகான், சந்து மீதோ, அவர்களது அமைப்பின் மீதோ அப்போதிருந்த காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸின் செயலற்ற போக்கை அகாலிதள தலைவர் லோங்கோவால் கண்டித்தார்.

  இந்த நிலையில்தான் காலிஸ்தான் போராட்டக்காரர்கள் 80களில் தீவிரவாத செயல்களில் இறங்கினர். இதனால் பஞ்சாபில் ராணுவம் நுழைந்தது. தினசரி குண்டுவெடிப்புகள், கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள், ஊரடங்கு உத்தரவுகள் தொடர் கதையாகின.

  இந்த நிலையில்தான் 1984ம் ஆண்டு ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் இந்திரா காந்தி. அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் பிந்தரன்வாலேயும், ஷாபேக் சிங்கும் பெருமளவில் வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் பதுக்கி வைத்திருந்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி பிந்தரன்வாலேயை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார் இந்திரா காந்தி.

  அதன்படி, லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் தலைமையிலான ராணுவப் படை உள்ளே புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் பிந்தரன்வாலே சுட்டுக் கொல்லப்பட்டார். அது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். இவர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள்.

  இந்த சம்பவம் இந்திரா காந்தி மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் சீக்கியர்கள் கடும் கோபம் கொள்ள வைத்தது.

  ராணுவ ரீதியாக பொற்கோவில் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தாலும், அரசியல் ரீதியாக அது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியைக் கொடுத்தது. சீக்கியர்களின் மிகப் புனிதமான இடம் பொற்கோவில். அந்த கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதும், அதிலும் சீக்கியர்கள் தங்களது புனிதப் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அனுப்பியதும், பல நூறு பேரின் ரத்தம் பொற்கோவிலில் சிந்தச் செய்ததும், பொற்கோவிலின் பல பகுதிகள் சேதமடைந்ததும் இந்திரா காந்தியின் மீது சீக்கியர்கள் கடும் கோபமடைய வைத்தது.

  சீக்கியர்களின் மனதையும், அவர்களின் புனிதத் தலத்தையும் இந்திரா காந்தி களங்கப்படுத்தி விட்டதாக குமுறல்கள் வெடித்ன.

  இந்த நிலையில்தான் சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா காந்தி.

  இதையடுத்து டெல்லியில் வரலாறு காணாத வன்முறை சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

  இப்படியாக போய்க் கொண்டிருந்த சீக்கிய தீவிரவாதம் 1993ம் ஆண்டு கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

  இருப்பினும் அந்த சமயத்தில், பாகிஸ்தானுக்குள் தப்பிச் சென்ற பப்பர் கல்சா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் இன்னும் கூட தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் 93க்குப் பிறகு பெரிய அளவிலான தீவிரவாத செயல்களில் அவற்றால் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது.

  இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் அங்கு தீவிரவாதம் தலை தூக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி மத்திய அரசையும், பஞ்சாபையும் கவலை கொள்ளச் செய்துள்ளன.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more