லோக்சபா சபாநாயகர் மீரா குமாருடன் அழகிரி சந்திப்பு- மொழிப் பிரச்சினை குறித்து விவாதித்தார்
டெல்லி: நீண்ட இழுபறிக்குப் பின்னர் மத்திய ரசாயணத் துறை அமைச்சர் மு.க.அழகிரி, நேற்று லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை சந்தித்தார். அவரிடம் தனக்குள்ள மொழிப் பிரச்சினை குறித்து விவாதித்தார்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் தங்களது தாய் மொழியில் பேசலாம். ஆனால் அமைச்சர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என விதி கூறுகிறது.
இது மு.க.அழகிரிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினை காரணமாக, அவரால் இதுவரை நாடாளுமன்றத்தில் பேசவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மு.க.அழகிரி தமிழிலேயே பேச வகை செய்ய வேண்டும். அதற்கு முதல்வர் கருணாநிதி உதவ வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்பு கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் திமுக தரப்பிலும் அழகிரி தமிழிலேயே பேச அனுமதிக்க வேண்டும் என லோக்சபா செயலகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் விதிப்படி ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் அமைச்சர்களால் பேச முடியும் என லோக்சபா செயலகம் கூறி விட்டது.
இதையடுத்து இந்தப் பிரச்சினை லோக்சபா சபாநாயகர் மீரா குமாரிடம் கொண்டு செல்லப்பட்டது. அவரும், அழகிரி வந்து என்னை சந்தித்து தனது பிரச்சினை குறித்துப் பேசலாம். அவருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இருப்பினும் மீரா குமாரை போய்ச் சந்திக்காமலேயே இருந்து வந்தார் அழகிரி. இந்த நிலையில் நேற்று அவர் மீரா குமாரை சந்தித்துப் பேசினார்.
அப்போது தான் தமிழிலேயே பேச அனுமதிக்கும்படி அழகிரி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இருப்பினும் மீரா குமார் - அழகிரி சந்திப்பின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து சபாநாயகர் அலுவலகம் எதையும் தெரிவிக்கவில்லை.
அழகிரியும் கூட இதுகுறித்து செய்தியாளர்களிடம் எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக மீரா குமாருடனான சந்திப்பை முடித்துக் கொண்டு அவர் சென்னைக்குக் கிளம்பிப் போய் விட்டார்.
இந்த மொழிப் பிரச்சினை காரணமாக ரசாயணத்துறை தொடர்பான கேள்விகள், விவாதங்களுக்கு அத்துறையின் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனாதான் பதிலளித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications