தமிழ்நாட்டைச் சேர்ந்த அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி மும்பையில் படுகொலை
மும்பை: தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானியுமான மகாதேவன் பத்மநாபன் அய்யர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
48 வயதாகும் பத்மநாபன், தெற்கு மும்பையில் உள்ள அவரது ஃபிளாட்டில் தலையில் தாக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்தும் கயிற்றால் நெரித்துக் கட்டப்பட்டிருந்தது. அவருக்குத் தெரிந்த யாரோதான் இந்தக் கொலையைச் செய்திருக்க முடியும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பார்க் அணு உலை பிரிவில் மெக்கானிக்கல் என்ஜீனியராக பணியாற்றி வந்தவர் பத்மநாபன். பிரீச்கண்டி மருத்துவமனைக்கு அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இவர் வசித்து வந்தார்.
கடந்த இரண்டு நாட்களாக இவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. செய்தித் தாள்கள் வெளியிலேயே கிடந்தன. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர் மாற்றுச் சாவி மூலம் கதவைத் திறந்து உள்ளே போய்ப் பார்த்தபோது அய்யர், படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்வேறு கோணங்களில் இந்தக் கொலை குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மகாதேவன் பத்மநாபன் அய்யர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications