பாகிஸ்தானில் மற்றொரு இந்து கடத்தல்: ரூ. ஒரு கோடி கேட்டு மிரட்டல்
பெஷாவர்: பாகிஸ்தானில் சீக்கியர்கள் கடத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, மற்றொரு அப்பாவி இந்துவை தாலிபான்கள் கடத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவரை விடுதலை செய்ய தாலிபான் தீவிரவாதிகள் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசி வருகின்றனர்.
பெஷாவரில் உள்ள யுனிவர்சிட்டி சாலையில் ராபின் சிங் என்ற கம்ப்யூட்டர் இன்ஜினியரை மர்ம நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடத்தியுள்ளனர்.
ராபின் சிங்கின் குடும்பத்தாரை தொடர்புகொண்ட கடத்தல் ஆசாமிகள், ரூ.ஒரு கோடி பணத்தை கொடுத்தால் விடுவிப்பதாக பேரம் பேசியுள்ளனர்.
ராபின் சிங்கின் சகோதரர் ராஜன்சிங் இதுதொடர்பாக மேற்கு கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட இடம் தங்களின் எல்லைக்குள் இல்லை எனக் கூறிவிட்டதாக ராஜன்சிங் தெரிவித்தார்.
எனினும், இவ்விவகாரம் அதிபர் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட ராபின் சிங்கை உடனடியாக மீட்க அதிபர் ஆஸிப் அலி சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமரிடம் தே.ஜ.கூ எம்பி்க்கள் சந்திப்பு:
இந் நிலையில் பாகிஸ்தானில் சீக்கியர்கள் இருவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பாஜக கூட்டணியைச் சேர்ந்த அலுவாலியா, ஹர்ஸ்ம்ரீத் கவுர், நரேஷ் குஜ்ரால், ரத்தன் சிங் அஜ்னாலா ஆகிய எம்பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்கள் சீக்கியர் கடத்தப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை நிர்பந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் உறுதியளித்ததாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications