பென்னாகரத்தில் வெற்றியை உறுதி செய்ய தமிழக பாமகவினர் திரண்டு வர வேண்டும்- ராமதாஸ்

பா.ம.க., மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைருக்கும் தனது கையெழுத்திட்டு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார் ராமதாஸ்.
அதில், பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க., வெற்றிபெறும் என எதிரணியினரும் ஒப்புக் கொள்ளக் கூடிய நிலை உருவாகியுள்ளது. நாம் வெற்றி பெற கட்சியில் உள்ள ஒவ்வொருவரின் உழைப்பும் தேவைப்படுகிறது.
எனவே கட்சியில், வன்னியர் சங்கத்தில் உள்ள அனைத்து பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பென்னாகரம் வர வேண்டும் என்று கோரியுள்ளார் ராமதாஸ்.
ஊருக்குள் வர விடாமல் தடுக்கப்பட்ட ராமதாஸ்...
இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு ராமதாஸ் மற்றும் பா.ம.க. வினர், கார் மற்றும் வாகனங்களில் பாப்பாரப்பட்டி அடுத்துள்ள வேலம்பட்டி என்ற கிராமத்துக்கு பிரசாரத்துக்கு சென்றனர்.
அப்போது, அங்கு திரண்டு வந்த அதிமுகவினர், ராமதாஸ் உள்ளிட்டோரின் வாகனங்களை தடுத்து நிறுத்தி உள்ளே வரக் கூடாது என்று கோஷமிட்டனர்.
அவர்களை பாமகவினர் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் யாரையும் உள்ளே விட மாட்டோம் என்று கிராமத்தினர் கூறி விட்டதால் பாமகவினர் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.
அதற்கு அடுத்த அடியாக, பா.ம.க., வினர் அனுமதியின்றி பயன்படுத்திய ஒன்பது வாகனங்கள் மீது, தேர்தல் விதிமீறல் குறித்து வழக்கை போலீஸார் பதிவு செய்தனர்.
அதே மாதிரி, பெரும்பாலை மற்றும் ஏரியூர் பகுதியில் அனுமதியில்லாமல் தி.மு.க.,வினர் பயன் படுத்திய நான்கு வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் மார்ச் 27ம் தேதி என அறிவிக்கப்பட்டதால், பிரசாரத்துக்கு வசதியாக பென்னாகரம், ஒகேனக்கல் பகுதிகளில், வீடு, லாட்ஜ் மற்றும் திருமண மண்டபங்களில், அரசியல் கட்சியினர் தங்கியுள்ளனர்.
குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலையில் பென்னாகரம்..
இடைத் தேர்தல் வந்தும் கூட பென்னாகரத்திற்கு விடிவு காலம் பிறக்கவில்லை. அங்கு குடிநீர்ப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது.
ஒரு மாதமாக ஆளுங்கட்சியினர், அரசின் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றியும், பல இடங்களில் அரசு சார்பில் போர்வெல் போட்டும், தண்ணீர் கிடைக்காத நிலையே உள்ளது.
இதனால், எதிர்க்கட்சியினர், குடிநீர் பிரச்னை குறித்து பெரிதாக பிரசாரம் செய்கின்றனர். திமுகவினரோ, இதோ வந்து விட்டது ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். வந்தவுடன் குடிநீர்ப் பிரச்சினை ஓய்ந்து விடும் என்று கூறி பிரசாரம் செய்கின்றனர்.
குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அங்கு தங்கியிருக்கும் அரசியல் கட்சியினரும் கூட அவதிப்படுவதைப் பார்க்க முடிகிறது.
பிரசாரத்திற்கு வந்த இடத்தில் குடிக்க தண்ணீர் கேட்டு பொதுமக்களை அணுகினால் பொசுக்கி விடுவார்களோ என்ற பயத்தில், குடிநீர் லாரிகளை வரவழைத்து தொண்டர்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனவாம் அரசியல் கட்சிகள்.
குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும், ஒகனேக்கலுக்கும் போய் குளித்துக் கொண்டிருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications