பெங்களூர் கார்ல்டன் டவர் தீவிபத்து - குவிந்தது ட்விட்டர் செய்திகள்
பெங்களூர்: பெங்களூர் கார்ல்டன் டவர் தீவிபத்து குறித்து பெருமளவில் நேற்று ட்விட்டர் செய்திகள் குவிந்தன.
மேலும், கார்ல்டன் டவர் கட்டடத்திற்குள் சிக்கியிருந்த இளைஞர் ஒருவர் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து ட்வீட் செய்தபடி இருந்தார். பல புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.
இதுதவிர பல்வேறு பிளாக்குகளிலும் கார்ல்டன் தீவிபத்து குறித்த ட்விட்டர் செய்திகள் பெருமளவில் இடம் பெற்றன. நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி குவிந்த ட்விட்டர் செய்திகளால் உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்தவர்களால் கார்ல்டன் டவர் விபத்து குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிந்தது.
ஒரு பெண் உயிர் தப்பிப்பதற்காக மேல் தளத்திலிருந்து கீழே குதித்து உயிர் விட்டதையும் ஒருவர் ட்விட் செய்து அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.
தீவிபத்து குறித்த முதல் புகைப்படங்களையும், ட்விட் செய்திகளையும் பெருமளவில் அனுப்பியவர் கிரண் ஜோன்னலகட்டா என்பவர்தான். இவரது ட்விட்டர் பயன்பாட்டுப் பெயர் ஜேக்கர்ஹேக் என்பதாகும்.
கார்ல்டன் டவர்ஸ் உரிமையாளர்கள் மீது வழக்கு:
இந் நிலையில் பெரும் தீவிபத்தை சந்தித்த பெங்களூர் கார்ல்டன் டவர்ஸ் கட்டட உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த கட்டடத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர், பழைய விமான நிலையச் சாலையில், இந்திரா நகர் மேம்பாலம் அருகே அமைந்துள்ள கார்ல்டன் டவர்ஸ் அடுக்குமாடிக் கட்டடத்தில் நேற்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் உயிர் தப்பிப்பதற்காக மாடியிலிருந்து குதித்த 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அந்தக் கட்டடத்திற்கு தற்போது அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்புப் படை இயக்குநர் செங்கப்பா கூறுகையில், மொத்த கட்டடத்தையும் நாங்கள் சீல் வைத்துள்ளோம். தீவிபத்துக்கான காரணத்தை அறிய வசதியாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தில், தீவிபத்து பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்து விசாரிக்க உள்ளோம்.
தீவிபத்து குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பெங்களூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள இதுபோன்ற உயர்ந்த கட்டடங்களில் தீவிபத்து தடுப்பு நடவடிக்கைகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராயவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல, கட்டட உரிமையாளர்கள் மீது கவனக்குறைவு மற்றும் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் இந்த விசாரணை எந்த அளவுக்கு உபோயகரமாக இருக்கும் என்பது தெரியவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட கார்ல்டன் டவர்ஸ் கட்டடத்தின் மாடிப்படிகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது. அதன் வழியாக பாதுகாப்புடன் இறங்கி வரும் வகையிலேயே அது அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் நேற்றைய சம்பவத்தில், 2ம் மாடியில் எழுந்த புகை மாடிப்படிகளை முழுமையாக அடைத்து நின்றதால் அதன் வழியே யாரும் இறங்கி வர முடியாத நிலை ஏற்பட்டது. இதுவே பெரும் குழப்பத்திற்குக் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
புகை மண்டி மாடிப்படிகளை அடைத்ததற்கு கட்டட உரிமையாளர்கள் எப்படிப் பொறுப்பாவார்கள் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications