முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசின் வஞ்சகப்போக்கு- வைகோ கண்டனம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிரான வஞ்சகப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முல்லைப் பெரியாறு பிரச்னையில், மத்திய அரசின் போக்கு, தமிழர்களுக்கு அநீதி இழைக்கும் ஓர் வஞ்சகப் போக்காகவே இருக்கிறது.
புதிய அணை கட்டத் திட்டமிடுகின்ற இடம், முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை விடப் பள்ளத்தில் அமைகிறது. எனவே, யார் முயன்றாலும், புதிய அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற முடியாது.
புதிய அணைக்கு ஆய்வு என்ற பெயரால், சட்ட விரோதமாக 56 அடி ஆழத்துக்கு, கடந்த 2 நாட்களாக குழிகள் அமைத்தும், அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டியும், கேரள அரசு தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது.
புதிய அணை கட்டியே தீருவோம் என்று முடிவெடுத்து விட்டார்களாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் உதாசீனம் செய்துவிட்டு, புதிய அணையைக் கட்டும்போது, அருகில் உள்ள பாறைகளை வெடி வைத்துத் தகர்த்து, நமக்கு உரிமையான அணையையும் சேதப்படுத்த தயாராகிவிட்டனர்.
அமராவதி அணைக்கு வரும் பாம்பாற்றில் அணை கட்ட முயல்வதைத் தடுக்கவும், குமரி மாவட்டத்தில் நெய்யாற்றில் தண்ணீரை வழங்காமல் நிறுத்திய முடிவை மாற்றவும், நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பு அணையைப் பழுதுபார்க்க அனுமதிக்க மதிமுக வலியுறுத்துகிறது.
இந்த கோரிக்கைகளுக்காக விவசாயிகளையும், மக்களையும் திரட்டி மே 28ல் கேரளத்துக்கு செல்லும் அனைத்து பாதைகளையும், வாகனங்கள் செல்லாமல் தடுக்கிற மறியல் நடத்தப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.
என்னதான் உங்க நிலைப்பாடு?-விஜயகாந்த்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆராய ஐவர் குழு அமைப்பது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி,
'இப்பிரச்னையில் தமிழக அரசு ஏமாந்துவிடவில்லை' என்றார். அடுத்த நாள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 'ஐவர் குழுவில் தமிழக அரசு இடம்பெறத் தேவையில்லை' என்ற தீர்மானம் அதிர்ச்சியை அளித்தது.
தமிழக அரசின் அடுத்தடுத்த நிலைமாற்றத்தால் மக்களிடையே சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து மக்களுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்டும்' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
வெற்று அறிக்கை வேண்டாம்-பாஜக
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை குறித்து பாஜகவும் கடுமையைக விமர்சித்துள்ளது.
பாஜகவின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆராய உச்ச நீதிமன்றம் ஐவர் குழுவை அமைத்துள்ளது. இதில் தமிழக அரசின் சார்பில் யாரையும் நியமிக்கத் தேவையில்லை என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் நீதிமன்றத்தில் எந்த மனுவையும் தாக்கல் செய்யாமல் குறைந்தபட்சம் கமிட்டியினுடைய செயல்படும் கால அளவை கூட குறைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல், கமிட்டியில் தாங்கள் யாரையும் நியமிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது தமிழக மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகிறது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான எந்த ஒரு பிரச்னையும் சமரசத் தீர்வின் மூலம் எட்ட முடிவதே நாட்டின் இறையாண்மையைப் பலப்படுத்தும் விஷயமாக இருக்க முடியும்.
நதிகளை தேசிய மயமாக்குவதின் மூலமே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகளை எந்த ஒரு மக்களின் உணர்வைத் தூண்டாமல் தீர்க்க முடியும் என பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை முதல்வர் கருணாநிதி, மத்திய அரசை நிர்பந்தம் செய்து சுமுகமாகத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
ஏற்கெனவே நீதி கிடைக்க நெடுந்தூரம் பயணம் செய்து களைத்து போன தமிழக மக்கள், தமிழக அரசிடம் அறிக்கையை எதிர்பார்க்காமல் முயற்சியை எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தின் நலன் காத்திட முதல்வர் கருணாநிதி உடனடியாகச் செயல்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications