மும்பை தாக்குதல் சதியாளன் சயீத்தை ஒப்படையுங்கள் - பாக்.குக்கு இந்தியா கோரிக்கை

மேலும் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றும் இக்பால் (புனை பெயர்) என்பவரின் பெயரும் இந்தியா அளித்துள்ள ஆவணத்தில் இடம் பெற்றுள்ளது.
மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் முதல் முறையாக இந்தியா , பாகிஸ்தான் இடையிலான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று காலை டெல்லியில் தொடங்கியது.
இந்தப் பேச்சுவார்த்தையில் வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் தலைமையிலான இந்தியக் குழும், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷீர் தலைமையில் அந்த நாட்டுக் குழுவும் பங்கேற்றன.
மும்பை தாக்குதல் நடந்து 14 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின்போது, 3 கோரிக்கை ஆவணங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியது.
இதில், மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிப்பதிலும், அதுதொடர்பான நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் அக்கறை காட்டாமல் இருப்பது குறித்து இந்தியா வருத்தமும்,அதிருப்தியும் தெரிவித்திருந்தது.
தாக்குதல் சம்பவத்தைத் திட்டமிட்ட, தாக்குதலுக்கு முக்கியக் காரணமான லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவன் சயீத், ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வரும் இக்பால், இந்தியன் முஜாஹிதீன் மற்றும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த மேலும் 7 முக்கிய நபர்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
சயீத் தவிர முஸ்ஸமில், அபு ஹம்சா, அபு காபா, உஸ்மான் ஆகியோரையும் ஒப்படைக்குமாறு இந்தியா கோரியுள்ளது.
2வது ஆவணத்தில், டேவிட் ஹெட்லியின் குருவாக கருதப்படும் தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி குறித்தது. இவனுக்கும் மும்பை சம்பவத்தில் தொடர்பு உள்ளது. ஹெட்லி மூலமாகவே இலியாஸ் காஷ்மீரியின் தொடர்புகள் குறித்துத் தெரிய வந்தது.
இந்தியாவுக்கு வந்து உளவு பார்த்த ஹெட்லி, தனது தகவல்களை எல்லாம் காஷ்மீரி மூலமாகவே லஷ்கர் இ தொய்பா அமைப்புக்குக் கொடுத்து வந்தான். காஷ்மீரி, அல் கொய்தாவின் ஒரு கமாண்டர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புனே சம்பவத்திற்கு நாங்கள்தான் பொறுப்பு என்று இந்த காஷ்மீரி கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
3வது ஆவணத்தில், இந்தியன் முஜாஹிதீன் மற்றும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவது குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லி ஹைதராபாத் இல்லத்திற்கு பேச்சுவார்த்தைக்காக வந்த பஷீர் தலைமையிலான பாகிஸ்தான் குழுவினரை நிரூபமா ராவ் வரவேற்று அழைத்துச் சென்றார்.
பேச்சுவார்த்தைக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிரூபமா ராவ், இரு தரப்பினரும் வெளிப்படையான மனதுடன் பேச அமர்கிறோம் என்றார்.
பஷீர் கூறுகையில், ஹைதராபாத் இல்லம் மிகவும் அருமையான இடம். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையாக இது அமையும் என கருதுகிறேன் என்றார்.
இந்தியத் தரப்பில் நிரூபமா ராவுடன், பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் சரத் சபர்வால், பாகிஸ்தான் விவகாரத்திற்கான இணைச் செயலாளர் ஒய்.கே.சின்ஹா, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாகிஸ்தான் தூதுக் குழுவுக்கு நிரூபமா ராவ் மதிய விருந்தளித்துக் கெளரவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனனை இன்று மாலை சந்திக்கிறார் பஷீர்.
நாளை காலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் அவர் சந்திப்பார்.
கடைசியாக கடந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற அணி சேரா நாடுகள் கூட்டத்தின்போது இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் சந்தித்தனர். இருப்பினும் மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications