டபிள்யூ.ஆர்.வரதராஜன் மீதான ஒழுங்கு நடவடிக்கை சரியே- பிரகாஷ் காரத் விளக்கம்
சென்னை: ஒரு பெண் கொடுத்த பாலியல் தொல்லை புகார்களின் அடிப்படையில்தான் டபிள்யூ.ஆர்.வரதராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் எந்தத் தவறும் இல்லை என்று சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ் காரத் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரதராஜன் பாலியல் ரீதியாக தொல்லை தருகிறார் என்று பெண் ஒருவரிடமிருந்து கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவுக்கு புகார் வந்தது. 2009-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த புகார் வந்தது. புகாருக்கு உள்ளாகியிருப்பவர் ஒரு மாநிலக்குழு உறுப்பினர் என்பதால் கட்சியின் நடைமுறை விதிப்படி, 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பது என மாநிலக்குழு முடிவு செய்தது.
விசாரணைக்குப் பிறகு அந்தக்குழுவின் அறிக்கை 2009 நவம்பர் 25-ந்தேதி நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் பரிசீலனைக்காக முன் வைக்கப்பட்டது.
தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பு கட்சி நடைமுறையின்படி மாநிலக் குழு கூட்டத்தில் வரதராஜனுக்கு வழங்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு விசாரணைக் குழுவின் கண்டறிதல்களை மாநிலக் குழு ஏற்றுக் கொண்டதோடு வரதராஜன், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
கட்சி விதிகளின்படி, மாநிலக்குழு தனது கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளை நடவடிக்கைக்காக மத்தியக் குழுவிற்கு அறிக்கையை அனுப்பியது. கொல்கத்தாவில் 2010 பிப்ரவரி 4-6 தேதிகளில் நடந்த கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் இந்த விஷயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வரதராஜன் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க உரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு மணி நேர விவாதத்திற்குப் பிறகு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு மாநிலக்குழுவின் பரிந்துரையை அங்கீகரிப்பது என்று மத்திய குழு முடிவு செய்தது.
மத்திய குழுவின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் அதே நேரத்தில் மத்திய கட்டுப்பாட்டுக்குழுவிற்கு மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பயன்படுத்தப்போவதாகவும் வரதராஜன் தெரிவித்தார். மேற்கூறப்பட்ட வகையில்தான் வரதராஜன் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் ஊடகங்களில், திட்டமிட்ட முறையில் பரப்பப்படும் சில செய்திகளால் உண்மை நிலை திரித்துக்கூறப்படுகிறது. வரதாஜன் தற்கொலைக்கு அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைதான் காரணம் என்று கூறுவது, கட்சியின் பெயருக்கும், கட்சித் தலைமைக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளார் காரத்.












Click it and Unblock the Notifications