கேட்பாரற்றுக் கிடந்த மூட்டையால் புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் அனாதையாகக் கிடந்த மர்ம மூட்டையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதியில் இருந்து போலீசாரால் கைப்பற்றப்பட்ட இந்த மூட்டையை வெடிகுண்டு நிபுணர்கள் இன்று முழுமையாக சோதனை நடத்திய பின்னர் அதில் வெடிகுண்டுகளோ அபாயகரமான ஆயுதங்களோ இல்லை என உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரியில் ஏராளமான பிரெஞ்ச் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளதால், சர்வதேச கவன ஈர்ப்புக்காக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய அரசு கடந்த வாரம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி ரயில் நிலையம் அருகே அனாதையாக சந்தேகப்படும் படியான மர்ம மூட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த மூட்டையில் ஒயர்கள், வெடிகுண்டு போன்ற உபகரணங்கள் இருந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் சந்தேகத்துக்கு இடமான மூட்டையை போலீசார் கைப்பற்றி வேறு இடத்துக்கு பத்திரமாக கொண்டு சென்றனர்.
இன்று வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மூட்டையில் இருந்த பொருட்கள் முழுவதையும் சோதித்த பின்னர் அதில் அபாயகாரமான பொருட்கள் எதுவும் இல்லை என உறுதி செய்தனர்.












Click it and Unblock the Notifications