புதுச்சேரி: கமல்ஷா சடலத்தை தோண்டி எடுத்து சிபிஐ திடீர் பரிசோதனை
புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் மர்மமான முறையில் இறந்த கைதி கமல்ஷாவின் உடல் சி.பி.ஐ அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
புதுச்சேரியில் வசித்தவர் ரவிஷா. இவரது மனைவி பார்வதிஷா, கடந்த 1999ம் ஆண்டில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ரவிஷாவின் தம்பி கமல்ஷாவை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், கமல்ஷாவுக்கு புதுச்சேரி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஷா மேல்முறையீடு செய்ததில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
புதுச்சேரி சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த கமல்ஷா, கடந்த 2008 ம் ஆண்டு கழுத்து அறுபட்ட நிலையில் மர்மமான முறையில் சிறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து, வழக்கு பதிவு செய்த புதுச்சேரி போலீசார் இது தற்கொலை என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில், கமல்ஷாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி வீரேந்திரநாத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் அளித்த அறிக்கையில், கமல்ஷா விஞ்ஞான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, கமல்ஷா மரணம் குறித்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை சி.பி.ஐ இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சரவணன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் புதுச்சேரி வந்து திப்ராயப்பேட்டை சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த கமல்ஷாவின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர்.
கமல்ஷாவின் எலும்புகளை பரிசோதனைக்காக சென்னை கொண்டு சென்றனர். இதனையடுத்து கமல்ஷா வழக்கில் புதிய திருப்பம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications