பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி உயர்வு- கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - வெளிநடப்பு
டெல்லி: பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் கலால் வரி உயர்த்தப்படும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்ததற்கு லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
மத்திய பட்ஜெட்டை இன்று பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அப்போது பெட்ரோல், டீசலுக்கான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பதாக தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் பாஜக, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட பிரணாப் முகர்ஜி, அனைவரும் அமர வேண்டும். பட்ஜெட் தாக்கல் செய்வது அரசியல்சட்ட கடமை. அதை செய்ய விடுங்கள். உங்களது ஆட்சேபனைகளை விவாதத்தின்போது தெரிவியுங்கள் என்றார்.
ஆனால் ஏற்கனவே விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த கலால் வரி உயர்வு மேலும் மோசமான நிலையை உருவாக்கும் என்று கூறி பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோஷமிட்டனர்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்தார். இதையடுத்து எதிர்க்கட்சியினர் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பில் பாஜக தொடங்கி கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டன.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி உயர்வு என்பது மிகக் கடுமையான பாதிப்பையே தரும் என்றார்.
சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது அவருடன் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், குருதாஸ் தாஸ் குப்தா உள்ளிட்ட பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் உடன் இருந்தனர். கிட்டத்தட்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பாக இது அமைந்தது.
லாலு பிரசாத் அப்போது ஆவேசமாக பேசினார். அவர் கூறுகையில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இணைந்து நிற்கிறோம். சர்வாதிகாரமான முறையில் இந்த ஆட்சி செயல்படுகிறது.
உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி உயர்வை அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்றார்.
பின்னர் அனைவரும் சேர்ந்து, மக்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும் திறமையில்லாத இந்த அரசை மாற்றுவோம் என்று கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications