சுங்க வரி உயர்வால் தங்க நகைகள் விலை கடுமையாக உயரும்
சென்னை: பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை 50 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்துள்ளால், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை கைக்கு எட்டாத தூரத்திற்கு உயரும் என அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே தங்கம் விலை எங்கேயோ போய் விட்டது. இதனால் நடுத்தர மக்கள், ஏழை, எளிய மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, 10 கிராம் தங்கத்துக்கு ரூ.200 சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது, ரூ.300 ஆக உயர்த்தப்படுகிறது.
மேலும், வெள்ளி மீதான சுங்க வரி, கிலோவுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்கம், விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நகைக்கடைக்காரர்கள் தரப்பில் கூறுகையில், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி உயர்வு, நிச்சயமாக பொதுமக்களின் தலையில் சுமத்தப்படும். இதனால் தங்கம், வெள்ளி விலை உயரும்.
இருப்பினும், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில், இதை விட அதிக விலை உயர்வை மக்கள் பார்த்துள்ளனர். எனவே மக்கள், தங்கம் வாங்கவே செய்வார்கள். தங்கத்தின் தேவை குறையாது.
இருப்பினும், தங்கம் மீதான மூலப்பொருள் வரி குறைக்கப்பட்டுள்ளதால், தங்கத்தை மெருகேற்றும் தொழில் புத்துயிர் பெறும். இதனால், பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் புழக்கம் அதிகரிப்பதுடன், தங்கம் இறக்குமதி குறைந்து விடும் என்றனர்.












Click it and Unblock the Notifications