ரூ. 50,000 லஞ்சம் வாங்கிய என்.எல்.சி. பொது மேலாளர் கைது
சென்னை: ரூ. 50,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழக பொது மேலாளர் கிருபானந்தம் கையும், களவுமாக சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கினார்.
58 வயதாகும் கிருபானந்தம் தியாகராயநகர் பர்கிட் ரோட்டில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ள நெய்வேலி ஹவுஸ் என்று அழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் இவரது அலுவலகம் உள்ளது.
சென்னை சம்பந்தப்பட்ட அலுவல்களை அவர் கவனித்து வந்தார். நெய்வேலி ஹவுஸ் கட்டிடத்தில் நெய்வேலி நிலக்கரி கழகத்தின் தலைவர் தங்குவதற்காக சொகுசு அறை ஒன்று உள்ளது.
குளிர்சாதன வசதியோடு உள்ள இந்த அறை சமீபத்தில் ரூ.2 லட்சத்து 79 ஆயிரம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. காண்டிராக்ட் முறையில் இதை புதுப்பித்தார்கள். இதை புதுப்பித்த காண்டிராக்டருக்கு பில் தொகையை அனுமதிப்பதற்காக கிருபானந்தம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக சி.பி.ஐ.க்கு புகார் வந்தது.
இதுதொடர்பாக காண்டிராக்டரிடம் சி.பி.ஐ. விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது காண்டிராக்டரை செல்போனில் தொடர்பு கொண்ட கிருபானந்தம் அவரை மிரட்டினார்.
மிரட்டிக்கொண்டிருந்தார். கேட்ட பணத்தைத் தராவிட்டால் இனிமேல் காண்டிராக்ட் கிடைக்காது என்றும் மிரட்டினார்.
இதே செல்போன் மூலம் கேட்ட சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தனது வாயாலேயே தனது குற்றத்தை வாக்குமூலம் போல தந்து விட்டார் கிருபானந்தம்.
இதையடுத்து உடனடியாக அவரைக் கைது செய்ய முடிவு செய்தனர். ரூ.50 ஆயிரத்தோடு வருவதாக அந்த காண்டிராக்டரை விட்டு கிருபானந்தத்திடம் சொல்ல வைத்தனர்.
இதைத் தொடர்ந்து நெய்வேலி ஹவுஸ் அலுவலகத்தில் லஞ்சப் பணத்தைப் பெறுவதற்காக கிருபானந்தம் நேற்று முன்தினம் இரவு 10 மணியைத் தாண்டி காத்திருந்தார்.
அப்போது அங்கு காண்டிராக்டர் வந்து சிபிஐ அதிகாரிகள் கொடுத்த நோட்டுக்களைக் கொடுத்தார். அதன் பின்னர் கிருபானந்தத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரது அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. வீட்டிலும் ரெய்டு போட்டனர். அசோக்நகரிலும் அவருக்கு ஒரு சொந்த வீடு உள்ளது. அங்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த அதிரடி ரெய்டுகளில் ரூ.22 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டது. வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அதுதொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. போலீசார் கைப்பற்றினார்கள்.
தியாகராயநகர் வீடும், அசோக்நகர் வீடும் ரூ.1 கோடி மதிப்புடையவை என்று தெரிய வந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கிருபானந்தத்தை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications