சிலி பூகம்ப எதிரொலி- ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கின

சிலியின், கன்செப்சியான் நகருக்கு அருகே, தென் பசிபிக் பெருங்கடலில், 22 மைல் ஆழத்திற்கு நேற்று அதிகாலையில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 8.8 ரிக்டராக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
மிக மிக சக்தி வாய்ந்த பூகம்பம் என்பதால் சிலியே குலுங்கிப் போய் விட்டது.
சிலியை உலுக்கியதோடு தென் அமெரிக்காவின் பல நாடுகளிலும் இந்த பூகம்பத்தின் பாதிப்பு இருந்தது. சக்தி வாய்ந்த பூகம்பத்தைத் தொடர்ந்து பலமுறை அதிர்வுகள் காணப்பட்டதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
சிலி, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் பூகம்பம் பாதிப்பை ஏற்படுத்தியது.
பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் சிலியின் ராபின்சன் தீவை தாக்கியது சுனாமி. 3 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகள் தீவைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஈஸ்டர் தீவை நோக்கி அலைகள் ஆர்ப்பரித்துச் சென்றன.
அர்ஜென்டினா முதல் ஈகுவடார் வரை நில அதிர்ச்சி உணரப்பட்டது. கடும் பூகம்பம் காரணமாக ஹவாய் முதல் ஜப்பான் வரையிலும், ஆஸ்திரேலியாவிலும் சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அவை வாபஸ் பெறப்பட்டன.
8.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் 6.2, 6.9 ரிக்டர் அளவுகோல்களில் அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டன.
சிலியில் ஏற்பட்ட பூகம்பம், கடந்த மாதம் ஹெய்தியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த பூகம்பம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஹெய்தி பூகம்பத்திற்கு 2 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
சிலியில் முதலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்திற்கு இதுவரை 215 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கன்செப்சியான் நகர் உருக்குலைந்து போயுள்ளது. சான்டியாகோ நகரில் கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகியுள்ளன. வீடுகள், ஹோட்டல்கள் உருக்குலைந்து போயுள்ளன. சிலியின் வடக்கு மற்றும் தென் பகுதிகளை இணைக்கும் பாலம் உடைந்து விட்டது.
மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மெட்ரோ ரயில் போக்குவர்ததும் பாதிக்கப்பட்டது சான்டியாகோ சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
கடந்த 25 ஆண்டுகளில் சில சந்தித்துள்ள மிகப் பெரிய பூகம்பம் இது என்று கூறப்படுகிறது.
சிலி மக்கள் பீதி அடைய வேண்டாம். தெருக்களிலேயே இருக்குமாறும், கட்டடங்களில் இருக்க வேண்டாம் எனவும் சிலி அதிபர் மிசல் பாசலெட் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிலியை உலுக்கிய பூகம்பம் தென் அமெரிக்கக் கண்டத்தின் பிற நாடுகளையும் கூட பரபரப்பில் ஆழ்த்தியது. அர்ஜென்டினா, ஈகுவடார், பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் பூகம்பம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
பிரேசிலின் சாவோ பாலோ நகரில் பல கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
பூகம்பம் தாக்கிய சிலியின் கன்செப்சியான் நகரில் தொலைத் தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டு விட்டதால் அங்கு பலியானவர்களில் இந்தியர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து அறிய முடியவில்லை என்று பிரேசிலில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசிலைப் போலவே அர்ஜென்டினாவின் பல பகுதிகளிலும் கூட பூகம்பம் உணரப்பட்டது. தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உயர்ந்த கட்டடங்களில் இருந்தோர் வேகம் வேகமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிலிக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் இப்போதைக்கு எந்த சர்வதேச உதவியையும் நாடப் போவதில்லை என்று சிலி அதிபர் கூறியுள்ளார்.
ஜப்பானை தாக்கியது சுனாமி
இந்த நிலையில் இன்று ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கின. முதல் சுனாமி அலைகள் மிகச் சிறிய அளவிலேயே இருந்தன. ஆனால் பெரிய அலைகள் எழும்பும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜப்பானின் ஓகஸ்வாரா தீவுகளில் முதல் சுனாமி அலைகள் தாக்கின. அதன் அளவு 4 இன்ச் உயரமே இருந்தது. அடுத்து ஹொகைடோ தீவில் 12 இன்ச் அளவிலான சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
சுனாமி தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து தெரியவில்லை.
அமெரிக்காவின் ஹவாய் பகுதியையும் சுனாமி அலைகள் தொட்டுச் சென்றுள்ளன.
பசிபிக் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையம் பல்வேறு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தது. இருப்பினும் இவற்றைப் பின்னர் திரும்பப் பெற்றது. ஆனால், ரஷ்யா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தங்களது நாடுகளை சுனாமி தாக்கலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் இருந்து வருகின்றன.
சிலி நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலைப் போன்ற ஒன்று இந்த முறையும் வரும் என பசிபிக் பிராந்திய நாடுகள் அஞ்சிக் கொண்டிருந்தன.
இதன் காரணமாக ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 1993ம் ஆண்டு ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதேபோல கடந்த 1960ம் ஆண்டு சிலி அருகே ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஜப்பானின் வடக்கு கடலோரப் பகுதிகளில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் அவமோரி, இவாதே, மியாகி ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 10 அடி உயரத்திலான சுனாமி அலைகள் தாக்கலாம் என்று முன்னறிவுப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் கார்கள், வாகனங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிக் கொண்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்று வருகின்றனர். கடற்கரைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
கடலோர நகரங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
துறைமுகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டன. முதல் சுனாமி அலைகளை விட 2வது மற்றும் 3வது அலைகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஹவாயை இன்று காலை சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து ஜப்பானின் அனைத்து கடலோரப் பகுதிகளிலும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர்.
இதேபோல வடகிழக்கு பகுதியில் உள்ள குஜி துறைமுகப் பகுதியில் 120 சென்டிமீட்டர் உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்தன.
மற்ற பகுதிகளில் கடலலைகள் 90 சென்டிமீட்டர் வரை எழும்புகின்றன. மேலும் தீவிரமான அலைகள் வரக்கூடும் என பூகம்ப ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மக்களை உஷார்படுத்த கண்காணிப்பு படையினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும் சுனாமி தாக்கும் என்ற அச்சம் இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சான்டியாகோ நகரில் சர்பிங் போட்டி திட்டமிட்டபடி நடந்தது.
டோங்கா தீவில் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டோங்காவில் சுனாமி தாக்கியதில் 9 பேர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். சமோவாவிலும் சுனாமி தாக்கியதில் 183 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சிலி பூகம்பத்தால் எழுந்துள்ள சுனாமி அலைகள் காரணமாக சமோவா மக்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதேபோல பிலிப்பைன்ஸ், நியசிலாந்தின் சதாம் தீவு, வடக்கு ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications