இன்னுமொரு துண்டு விழும் பட்ஜெட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2010-2011-ம் ஆண்டுக்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் காணப்படும் நிதிப் பற்றாக்குறை மிகவும் கவலை தரும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதைக் கட்டுப்படுத்த பல நிதிச் சலுகைகளை திரும்பப் பெற்றுள்ளார் நிதியமைச்சர் என்பது ஒரு ஆறுதல்.

பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் உற்பத்தி வரி விதித்திருக்கிறார். இதனால் பணவீக்க விகிதம் மேலும் அதிகரித்து மக்களின் பொருளாதாரச் சுமை அதிகரிக்கும் என்று கண்டித்து எதிர்க்கட்சிகள் கூண்டோடு நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கார்கள், ஏர்-கண்டிஷனர்கள்,சிமெண்ட், சிகரெட், சுருட்டு, இதர புகையிலைப் பொருள்கள் போன்றவற்றின் மீதான வரியை உயர்த்தியிருக்கிறார்.

சேவை வரி விதிப்பின் கீழ் மேலும் சிலவற்றைச் சேர்த்திருக்கிறார். இதனால் கூடுதலாக ரூ.3,000 கோடி வருவாய் கிடைக்கும்.

கம்பெனிகளின் வரி மீது போடப்பட்ட கூடுதல் தீர்வையை 10%-லிருந்து 7.5% ஆக குறைத்திருக்கிறார். அதே சமயம் குறைந்தபட்ச மாற்று வரி அளவை 15%-லிருந்து 18% ஆக அதிகப்படுத்தியிருக்கிறார்.

மறைமுக வரிகளை உயர்த்தியிருப்பதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.46,500 கோடி வருவாய் கிடைக்கும். அதே சமயம், அறிவித்துள்ள நேரடி வரிச் சலுகைகளால் ரூ.26,000 கோடி வருவாய் குறையும். இதனால் வரி இனங்களில் நிகர வருவாய் ரூ.20,500 கோடியாக மட்டுமே இருக்கும்.

அரசின் மொத்தச் செலவு ரூ.11,08,749 கோடி. அதில் திட்டச் செலவு அளவு மட்டும் ரூ.3,73,092 கோடி.

அரசுக்கு வரிகள் மூலமும் வரியற்ற இதர இனங்கள் மூலமும் ரூ.6,82,212 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆக பற்றாக்குறை அளவு ரூ.3,81,408 கோடியாக நிற்கிறது. இந்த பற்றாக்குறையை கடன் வாங்கி சமாளிக்க அரசு உத்தேசித்திருக்கிறது.

இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.

அவர்கள் வருத்தமெல்லாம் குறைந்தபட்ச மாற்று வரியை நிதி அமைச்சர் உயர்த்தி விட்டாரே என்பதுதான்.

கார்கள், பெட்ரோல் விலை உடனடி உயர்வு

உற்பத்தி வரியை அரசு உயர்த்தியிருப்பதால் கார்களின் விலையை உயர்த்துவதாக கார் உற்பத்தியாளர்கள் உடனே அறிவித்து விட்டனர். பெட்ரோல், டீசல் மீது உற்பத்தி வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் என்று அதிகரித்த நிதி அமைச்சர் இந்த உயர்வு வெள்ளிக் கிழமை நள்ளிரவு முதலே அமலுக்கு வருகிறது என்று அறிவித்துள்ளார்.

விவசாயிகள் வங்கிகளில் வாங்கும் கடனை தவணை தவறாமல் திருப்பிச் செலுத்தி வந்தால் அடுத்த முறை அவர்களுக்குத் தரும் கடனுக்கு 5% மட்டுமே வட்டியாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இப்போது இது 7% ஆக இருக்கிறது.

வீடமைப்புத் துறை, வங்கித் துறைக்கும் சலுகைகளை அறிவித்திருக்கிறார்.

அரசுத் துறை நிறுவனப் பங்கு விற்பனை மூலம் இந்த நிதியாண்டில் ரூ.40,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறார். கடந்த ஆண்டு ரூ.25,000 கோடி திரட்டப்பட்டது.

பசுமைப் புரட்சியை நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா, மேற்கு வங்காளம், கிழக்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த தனியாக ரூ.400 கோடியை முதல் முயற்சிக்காக ஒதுக்கியிருக்கிறார்.

விவசாயத் துறைக்கு...

நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் மீண்டும் 9 சதவிகிதம் என்ற அளவை எட்ட வேண்டும், அரசின் வருவாயைப் பெருக்கி செலவைக் குறைக்க வேண்டும், விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை என்று அனைத்துத் துறைகளும் சமச்சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்ற 3 லட்சியங்களோடு பட்ஜெட்டைத் தயாரித்திருப்பதாக முகர்ஜி தனது உரையில் குறிப்பிட்டார். ஆனால் விவசாயத்துறையில் வளர்ச்சிக்கான சலுகைகளை மிகக் குறைவாகவே அறிவித்துள்ளார்.

விவசாயத் துறைக்குத் தரும் சலுகையாக, மண்டிகளில் மூட்டைகளை அடுக்கவும் உணவு தானியங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் தேவைப்படும் சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டியிருப்பதால் அவற்றுக்கு இறக்குமதித் தீர்வையிலிருந்து 5 சதவிகிதம் குறைத்திருக்கிறார். சேவை வரியிலிருந்தும் விலக்கு தந்துள்ளார்.

காய்கறி, பழங்கள், பூக்கள் போன்ற வேளாண் பொருள்களைப் பதப்படுத்தவும், பாதுகாப்பாக வைத்திருக்கவும் குளிர் அறைகள், குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க உற்பத்தி வரிக்குறைப்பும் சேவை வரியிலிருந்து முழு விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வால் மிளகு, பெருங்காயம் மீதான அடிப்படை உற்பத்தி வரி குறைக்கப்படுகிறது.

வேளாண் துறையில் உள்ள மகளிருக்கு அதிகாரம் அளிக்க 'மகிளா கிசான் சசக்திகரண் பரியோஜனா' என்கிற திட்டம் அமல் செய்யப்படும்.

மருத்துவ பரிசோதனைக்கு சேவை வரி...

மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் இவ்வகை விளை பொருள்களுக்கும் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட குளியல் சாதன தயாரிப்புகளுக்கும் பயன்படும் பொருள்களுக்கும் இதே வரிச் சலுகை தரப்படுகிறது. அதே நேரம் உரங்களின் விலை உயர்வு, இந்தச் சலுகைகளை சாப்பிட்டு விடும் அபாயமுள்ளதையும் மறுப்பதற்கில்லை.

உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் பயணம் (எல்லா வகுப்புகளுக்கும்), முழு உடல் மருத்துவப் பரிசோதனை, சுகாதார இன்சூரன்ஸ் திட்டங்களில் சேருவதற்காகச் செய்து கொள்ளும் முழு உடல் பரிசோதனை போன்றவற்றுக்கும் இனி சேவை வரி விதிக்கப்படும்", என்று பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார் முகர்ஜி.

இன்னும் இவற்றின் மீது விவாதங்கள் வரவிருக்கின்றன. விமர்சனங்களின் அடிப்படையில் சில மாறுதல்கள் வரவும் வாய்ப்புள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் காரணிகளுக்காக இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஏற்கப்படுமா தெரியவில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+