மோசடி புகார்கள்: கல்கி ஆசிரமத்திற்கு பக்தர்கள் வருகை குறைந்தது
சித்தூர்: கல்கி ஆசிரமம் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. ஆசிரமத்தின் நிலத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு நஷ்ட ஈடு கோரி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்ய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு கல்கி பகவான் மற்றும் அவரது மனைவி அம்மா பகவான் ஆகியோர் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள்.
கல்கி பகவானின் நிஜப்பெயர் விஜயகுமார். இவர் எல்ஐசி ஏஜெண்டாக இருந்தவர். அம்மா பகவானின் பெயர் புஜ்ஜம்மா இவர் தன்னை அம்மா பகவான் என்று மாற்றிய பிறகு தன்னை பத்மாவதி தாயார் என்று பக்தர்களிடம் கூறி ஆசி வழங்கினார்.
அங்குள்ள கல்கி தீட்சை பீடத்தில் அம்மா பகவானும், கோல்டன் சிட்டி கட்டிடத்தில் கல்கி பகவானும் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் மயக்க நிலையை ஏற்படுத்தும் போதைப்பொருள் கலந்திருப்பதாக விஜயவாடாவை சேர்ந்த நாராயணா என்ற பக்தர் புகார் கூறினார்.
மேலும் போதை பிரசாதம் கொடுத்து ஆசிரமத்தில் செக்ஸ் லீலை நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கல்கி ஆசிரமம் அருகே உள்ள காம்பாக்கம், தாண்டூர் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கும்பலாக சென்று ஆசிரமத்தை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காம்பாக்கம் கிராம மக்கள் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை திடீரென ஆக்ரமித்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதுபற்றி காம்பாக்கம் கிராம மக்கள் கூறும்போது,
'கல்கி ஆசிரம நிர்வாகி விஜயகுமார் (கல்கி பகவான்) சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர அரசு எங்களுக்கு தந்த நிலத்தை ஏமாற்றி வாங்கிவிட்டார்.
அப்போது அவர் எங்களுக்கு ரூ.5 ஆயிரம்தான் தந்தார். இப்போது இந்த நிலத்தின் மதிப்பு லட்சக்கணக்காக மாறிவிட்டது எங்களுக்கு அவர் உரிய நஷ்டஈடு தராவிட்டால் எங்கள் நிலத்தை தரமாட்டோம்.
எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்த இவர் தன்னை கடவுள் என்று கூறி பக்தர்களை ஏமாற்றி வருகிறார்.
தொடக்கத்தில் எங்களிடம் உள்ள நிலத்தை அடியாட்கள் மூலம் மிரட்டித்தான் வாங்கினார். நாங்கள் அவரது மோசடி பற்றி பல தடவை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை' என்றனர்.
கல்கி ஆசிரமம் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.
ஆசிரமத்திற்கு வந்திருந்த ஒரு சில பக்தர்களும் பிரசாதத்தை வாங்க மறுத்துவிட்டனர். பக்தர்கள் வருகை குறைந்ததால் வருமானம் கணிசமாக குறைந்தது.












Click it and Unblock the Notifications