புதிய-பழைய சட்டசபை வளாகங்களில் கருணாநிதி படம்
சென்னை புதிய சட்டசபை வளாகத்தில், முதல்வர் கருணாநிதியின் படம் இடம் பெற வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல பழைய சட்டமன்ற வளாகத்திலும் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் வைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகிற 13ம் தேதி தமிழக அரசு கட்டி வரும் புதிய சட்டமன்ற வளாகம் திறக்கப்படுகிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந் நிலையில் தமிழக அமைச்சரவையின் 44-வது கூட்டம் சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இது தற்போதைய கோட்டையில் நடைபெறும் கடைசி அமைச்சரவைக் கூட்டமாகும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
முதல்வர் கருணாநிதி 1957ம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தமிழகச் சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 50 ஆண்டு காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
அத்துடன் 1967ம் ஆண்டு முதன் முறையாக அமைச்சராகவும்- 1969ம் ஆண்டில் முதன்முறையாகத் தமிழக முதலமைச்சராகவும் பொறுப்பேற்று -2006ம் ஆண்டு முதல் ஐந்தாம் முறையாகத் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்து, ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகிறார்.
தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சீரிய முறையில் கடமையாற்றி வரும் முதல்-அமைச்சர் கருணாநிதியை ஜனநாயகத்தின் பால் பற்று கொண்ட அனைவரும் பெரிதும் பாராட்டுகின்றனர்.
ஜனநாயக நெறிமுறைகளை அரசியலிலும், ஆட்சியிலும் கடைபிடித்து வருவதுடன், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டிப் பணியாற்றி வருபவர் முதல்வர் கருணாநிதி.
தமிழகத்தின் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்று, அரும் பணியாற்றி வரும் முதல்வர் கருணாநிதி, தமிழகச் சட்டமன்றப் பேரவைக்குப் புதிய வளாகம் அமைத்து, 13.3.2010 அன்று திறப்பு விழா காணவிருக்கின்றார்.
இந்நிலையில், "தமிழகச் சட்டமன்ற சரித்திரத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி இந்த மாமன்றத்திற்குச் சிறப்பு சேர்த்து வரும் முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்தை, புதிய சட்டமன்ற வளாகத்திலும், பழைய சட்டமன்ற வளாகத்திலும் திறந்து வைப்பது'' என்ற தீர்மானம் வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் முன்மொழிய, நிதி அமைச்சர் க.அன்பழகன் வழிமொழிய, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு குறித்தும் விவாதம்:
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு விவகாரம், கலைஞர் வீட்டு வசதித் திட்டம், பட்ஜெட் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
கோட்டை வளாகத்தில் நடைபெறும் கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்பதால் முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசினாராம்.
எதியூரப்பாவும் வருகிறார்:
இந் நிலையில் புதிய சட்டசபைத் திறப்பு விழாவில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் கலந்து கொள்ளவுள்ளார். இதுதொடர்பாக தனது ஒப்புதல் கடிதத்தையும் அவர் அனுப்பியுள்ளார்.
மரக்கன்று நடும் மன்மோகன்:
இதற்கிடையே, திறப்பு விழாவுக்காக டெல்லியிலிருந்து 13ம் தேதி மாலை வரும் பிரதமரும், சோனியா காந்தியும் விமான நிலையத்திலிருந்து நேராக விழா நடைபெறும் இடத்திற்கு வருகிறார்கள்.
பின்னர் புதிய சட்டசபைக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். அதற்கு முன்பாக அவர் மரக் கன்றுகளை நடுகின்றனர்.
பின்னர் கட்டடத்திற்குள் சென்று பார்வையிடுகிறார் பிரதமர். பிறகு அவரும், சோனியாவும் விழா மேடைக்கு வருகின்றனர். மாலை ஐந்தரை மணியளவில் விழா தொடங்குகிறது.
இதில் பிரதமர், சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, சபாநாயகர் ஆவுடையப்பன், தலைமைச் செயலாளர் ஆகியோர் பேசவுள்ளனர். கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications