மின் நிலையத்துக்கு நிலம் தந்தவர்களுக்காக தேமுதிக போராட்டம்
சென்னை: ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதி மக்களின் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் வரும் 7ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
அவர்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும். அரியலூர் பகுதிகளில் சிமென்ட் ஆலைகளில் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும்.
போதுமான மின் விநியோகம் இல்லாததால் மாவட்டம் முழுவதிலும் உள்ள தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்கள், நெசவாளர்கள் படும் அவதியை எடுத்துக்காட்டிய கட்சி தொண்டர்கள் மீது காவல் துறையினர் போடும் பொய் வழக்குகளைக் கண்டித்து, வரும் 7ம் தேதி காலை 10.00 மணியளவில் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications