மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: லாலு, முலாயம் போர்க்கொடி-வாக்கெடுப்பு தள்ளிவைப்பு

இன்று முற்பகல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியதும் சமாஜ்வாடிக் கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் எழுந்து அமளியில் இறங்கினர்.
தற்போதைய நிலையில் மகளிர் மசோதாவை ஏற்க முடியாது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்படுத்தப்பட்ட, முஸ்லீம் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த மசோதாவை ஏற்க முடியாது என்று அவர்கள் கூறினர்.
இதனால் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
லோக்சபா கூடியதும் சபாநாயகர் மீரா குமார் கேள்வி நேரத்தைத் தொடங்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து விரைந்து எழுந்த லாலு பிரசாத் யாதவும், முலாயம் சிங்கும் சபாநாயகரின் இருக்கையை நோக்கி சென்றனர். கேள்வி நேரத்தை ஒத்திவைக்குமாறும், மசோதாவை ஏற்க முடியாது என்றும் கூறி கடுமையாக கோஷமிட்டனர்.
இதையடுத்து சபையை சிறிது நேரம் ஒத்திவைத்தார் மீரா குமார். பின்னர் சபை மீண்டும் கூடியதும் மறுபடியும் அமளி தொடங்கியது. இதையடுத்து 2 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
ராஜ்யசபாவிலும் கேள்விநேரத்தை நடத்த முடியாமல் லாலு, முலாயம், பகுஜன் சமாஜ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரி்நதுரைகளை முதலில் அமல்படுத்துமாறும் அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போதும் சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
ராஜ்யசபாவில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மசோதாவைத் தாக்கல் செய்யுமாறு அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியால் அழைக்கப்பட்டார். லாலு, முலாயம், மாயாவதி கட்சி எம்.பிக்கள் பெரும் அமளியில் இறங்கினர்.
அவையின் மையப் பகுதியில் கூடி கடுமையாக கோஷமிட்டனர். இருப்பினும் இந்த அமளிக்கு நடுவில் மசோதாவைத் தாக்கல் செய்தார் மொய்லி.
அன்சாரி கையில் இருந்த மசோதா பறிப்பு...
இதைத் தொடர்ந்து அவைத் தலைவர் அன்சாரியின் இருக்கையை நோக்கிப் பாய்ந்த சில உறுப்பினர்கள், அவரது டேபிளில் வைக்கப்பட்டிருந்த மசோதா நகலைப் பறித்து கிழித்து வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த அன்சாரி, 3 மணி வரை சபையை ஒத்திவைத்தார். இதேபோல லோக்சபாவும் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாலை 4 மணி வரை தற்போது இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. ஆனால் 4 மணிக்குப் பிறகும் கூட நிலைமை மாறவில்லை.
இதையடுத்து இன்று வாக்கெடுப்பு நடத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டு ஒரு நாளைக்கு அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை அவை கூடியதும் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது. இருப்பினும் லாலு, முலாயம் கட்சியினர் கடும் கொந்தளிப்பில் இருப்பதால் நாளையும் அது சுமூகமான நிலையில் நடைபெறுமா என்பது சந்தேகம்தான்.
லாபிக்கு மாறுமா வாக்கெடுப்பு...
இதற்கு முன்பு சட்ட அமைச்சர்களைத்தான் மசோதா எதிர்ப்பாளர்கள் குறி வைத்தனர். ஆனால் முதல் முறையாக ராஜ்யசபா தலைவருக்கு அவர்கள் குறி வைத்துள்ளனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராஜ்யசபா வளாகத்திற்குள் பெருமளவில் மார்ஷல்கள் குவிக்கப்பட்டனர்.
ராஜ்யசபா தலைவர் இருக்கையைச் சுற்றிலும் கூடுதல் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டனர்.
நாடாளுமன்ற விதிப்படி, ஒரு தீர்மானம் அல்லது மசோதா மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்கு வரலாறு காணாத அளவுக்கு இடையூறு ஏற்பட்டால் வாக்கெடுப்பை லாபியில் வைத்து நடத்தலாம் என்று உள்ளது.
அதாவது சபாநாயகரோ அல்லது ராஜ்யசபா தலைவரோ அவர்களது இருக்கையில் இருந்து அவையை நடத்துவார்கள். மசோதா அல்லது தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள் மட்டும் லாபிக்கு போகுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.
அவர்கள் அங்கு சென்றதும் அங்குள்ள பதிவேட்டில் கையெழுததிட வேண்டும். தீர்மானம் அல்லது மசோதா நிறைவேறத் தேவையான அளவுக்கு எம்.பிக்கள் கையெழுத்து சேர்ந்தால் அது நிறைவேறியதாக அறிவிக்கப்படும்.
லாபியில் பெருமளவில் பாதுகாவலர்கள் குவிக்கப்பட்டிருப்பார்கள். எனவே அங்கு அமளி ஏற்பட வாய்ப்பில்லை.
தற்போது அதே அளவிலான வரலாறு காணாத அமளியும், நெருக்கடியும் நிலவுவதால் நாளை லாபியில் வைத்து வாக்கெடுப்பை நடத்த அரசு முடிவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்து வந்த வரலாறு...
கடந்த 1996ம் ஆண்டு தேவெ கெளடா தலைமையிலான அரசு முதல் முறையாக நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்போது ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக மசோதா கிடப்பில் போடப்பட்டது. அதே நிலை இன்று வரை நீடித்து வருகிறது.
1998ம் ஆண்டும் இதை தாக்கல் செய்ய முயற்சி நடந்து தோல்வியுற்றது. 99ம் ஆண்டிலும் இதே கதைதான். அப்போது லோக்சபாவில் சமாஜ்வாடிக் கட்சி உறுப்பினர் எஸ்.பி.சிங், சட்ட அமைச்சர் ராம் ஜேட்மலானியிடமிருந்து மசோதாவை பறித்து எறி்ந்தார்.
பின்னர் 2008ம் ஆண்டு ராஜ்யசபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2009ம் ஆண்டு மே மாதம் ஜெயந்தி நடராஜன் தலைமையிலான குழு மசோதா குறித்த தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 25ம் தேதி மத்திய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து சர்வதேச மகளிர் தினமான இன்று மசோதாவை நிறைவேற்றி, பெண்களுக்குப் பரிசாக அளிக்க காங்கிரஸ் திட்டமிட்டது.
காங்கிரஸின் இந்தத் திட்டம் பலிக்குமா, இந்தியப் பெண்களின் கனவு பலிக்குமா என்பது இன்று மாலை தெரிந்து விடும்.
பிரதமர் முக்கிய ஆலோசனை:
முன்னதாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சிக்கலின்றி நிறைவேற்றும் உத்திகள் குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா-யார், யார் ஆதரவு?:
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றப் போதுமான எண்ணிக்கையிலான எம்.பிக்கள் இருப்பதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கூறுகிறது.
ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவை நிறைவேற்ற 155 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் தங்களுக்கு 164 பேரின் ஆதரவு இருப்பதாக அரசு கூறுகிறது.
அதேசமயம், லோக்சபாவைப் பொறுத்தவரை தேவையான எண்ணிக்கைக்கும் கூடுதலாக அதாவது 410 பேரின் ஆதரவு இருப்பதாக கூறுகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
ஒருவேளை மசோதா மீது விவாதம் நடந்து, வாக்கெடுப்பு நடத்தப்படும்போது இந்த எண்ணிக்கை திடீரென குறைந்து, மசோதா தோற்கடிக்கப்பட்டால், அரசுக்கு பெரும் சிக்கலாகி விடும் வாய்ப்பும் உள்ளது. அதாவது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் போன்ற ஏதேனும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளது.
நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்:
இதைத் தவிர்க்க நாளை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
மசோதாவை சிக்கலின்றி நிறைவேற்றுவது தொடர்பாக நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications