சமய ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் நடக்காதீர்கள்: துறவிகளுக்கு இ.முன்னணி கோரிக்கை
சென்னை: தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பி இந்து சமுய ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் துறவிகள் நடந்து கொள்ளக் கூடாது என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
தற்போது நாட்டில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் துவாரகா பீடம் சங்கராச்சாரியார் சுவாமிகள் கிளப்பியுள்ள, உண்மையான சங்கராச்சாரியார் பீடத்து துறவிகளுக்கே மரியாதை செய்யப்பட வேண்டும். தங்களை சங்கராச்சாரியார்களாக சொல்லிக் கொள்பவர்களுக்கு அளித்துள்ள சலுகைகளை, மரியாதைகளை கும்பமேளா நிர்வாகம் திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ள கருத்து தேவையற்றது.
ஸ்ரீ ஆதிசங்கரர் சர்வக்ஞர் பீடம் ஏற்று வந்த வழியில் வந்த ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியாரின் பிரகாசத்தால் சங்கர மடங்களின் மீது பாரதம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பக்தியும், மரியாதையும் பரவியது என்பது வரலாற்று உண்மை.
மீண்டும் உலக அரங்கில் இந்து தர்மமானது தலை நிமிர்ந்து வீறுநடைபோட மகான்கள் தங்களது சமுதாய, ஆன்மீக பணி மூலம் செயல்பட வேண்டுமே தவிர, இதுபோன்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதும், அதனை ஆதரிப்பதும் வருத்தமளிக்கிறது.
மக்களால் மதிக்கப்படும் மகான்களுக்கு மரியாதையும், வசதிகளும் செய்து கொடுக்கக் கூடாது என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. சர்ச்சையைக் கிளப்பி இந்து சமுதாய ஒற்றுமையை குலைத்து, மற்றவர்களின் ஏளனத்திற்கு ஆளாக வேண்டாம் என்று துறவியர் பெருமக்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications