அடுத்து அதிமுக ஆட்சியா?-'குட் ஜோக்' என்கிறார் வீரபாண்டி!
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி மலரப் போகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை என்று விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
தமிழகத்தின் புதிய மற்றும் பழைய சட்டசபை வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் வைக்கும் முடிவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டார்.
அவருக்கு பதில் அளிக்கும் வகையில் வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட்டுள் அறிக்கையில்,
5 முறை முதல்வராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக எம்எல்ஏவாகவும், போட்டியிட்ட தேர்தல்கள் அனைத்திலும் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருபவர் கருணாநிதி.
ஜனநாயக நெறிமுறைகளை அரசியலிலும், ஆட்சியிலும் கடைப்பிடித்து வருவதுடன், தமிழக மக்களின் தரம் உயர தொலைநோக்கு திட்டங்களை தீட்டிவரும் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியின் உருவப் படத்தை சட்டசபைக்குள் வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் நான் முன்மொழிந்தேன்.
அப்படியொரு தீர்மானத்தை முன்மொழியப் போவது முதல்வருக்கோ, மற்றவர்களுக்கோ தெரியாது. நான் முன்மொழிந்த பிறகு அமைச்சரவையில் உள்ள ஒவ்வொருவரும் அதனை வரவேற்றனர்.
அமைச்சர்கள் மட்டுமல்ல, மற்ற கட்சிகளைச் சேர்தவர்களும் தொலைபேசியில் எனக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசியல் நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாமல் தன் மனம் போன போக்கில் அறிக்கை விடுவது ஜெயலலிதாவின் வாடிக்கை குணமாகி விட்டது.
இன்று அவர் வெறுப்பின் உச்சியிலே வேதனைப்பட்டு கொண்டிருப்பதால் கருணாநிதியின் உருவப்படத்தினை சட்டமன்ற பேரவையிலே வைப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் புலம்பி தள்ளியிருக்கிறார்.
ஜெயலலிதா நப்பாசை கொண்டு அவரது அறிக்கையின் இறுதியில் 'அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி மலரப் போகிறது' என்றும், அப்போது மாற்றி படத்தை அமைக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை வாசகம் இது தான்.
அவரைவிட்டு வேக வேகமாக விலகிக் கொண்டிருக்கின்ற கட்சிக்காரர்களை நிறுத்தி வைக்க அவரும் படாதபாடு பாடுகிறார். அம்மையாரின் இந்த கனவு நிச்சயமாக நிறைவேறாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications