நித்தியானந்தா சீடரின் முன்ஜாமீன் கோரிக்கை டிஸ்மிஸ்
சென்னை முன்ஜாமீன் கோரி நித்தியானந்தாவின் சீடர் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது.
இதுதொடர்பாக ஸ்ரீ நித்ய சரவணானந்தா என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,
நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் வசிக்கிறேன். 1983-ம் ஆண்டு முதல் ஹோமியோபதி டாக்டராக பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில், ஒரு விபத்தில் சிக்கி 16 ஆண்டுகள் படுக்கையில் இருந்தேன். எனது நண்பர்களின் ஆலோசனைப்படி நித்யானந்தாவை சந்தித்து ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டேன். யோகாசனம் போன்ற பயிற்சிகள் எடுத்து அவரது சீடராக மாறினேன். தற்போது பலருக்கும் நான் யோகா பயிற்சி அளித்து வருகிறேன்.
இந்த நிலையில், நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா பற்றிய படத்தொகுப்பு சமீபத்தில் வெளியானது. இதுதொடர்பாக என்மீதும் வழக்கு தொடருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. இதன்மூலம் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் போலீசார் என்னை கைது செய்வதாக சந்தேகம் உள்ளது. எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி நாகமுத்து, சரவணானந்தா மீது எந்த போலீஸ் நிலையத்தில், எந்தெந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு வக்கீல் முனியப்பராஜிடம் கேட்டார். அதற்கு அவர், சரவணானந்தா மீது ஒரு வழக்கும் பதிவாகவில்லை என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி முன்ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
