பொறியியல் பட்டதாரிகளில் 50% மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள் - பாலகுருசாமி
கோவை: பொறியியல் பட்டம் பெறும் மாணவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே, பணி புரிய தகுதி உள்ளவர்களாக இருக்கின்றனர் என்று மத்திய பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலகுருசாமி வருத்தத்துடன் கூறியுள்ளார்.
கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில், உயர்கல்வி தர மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு, மத்திய பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலகுருசாமி பேசுகையில்,
உயர்க ல்வியின் தரம் பற்றி பல ஆண்டுகளாக பேசி வருகிறோம். ஆனால், தீர்வு கிடைத்தபாடில்லை. நம் நாட்டில் உயர் கல்வியின் தரம் குறைந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இன்றைய நிலையில் 50 சதவீத பொறியியல் மாணவர்களும், 10 சதவீத கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களும் மட்டுமே பணி புரிய தகுதியுள்ளவர்களாக உள்ளனர்.
பொறியியல் பட்டம் பெறும் மாணவர்களில் 90 சதவீதத்தினர், வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய விஷயங்களை கையாள்வதில் பின்தங்கியுள்ளனர்.
படித்ததை செயல்படுத்த தெரிய வேண்டும். மாணவர்களின் மதிப்பெண்ணில் கவனம் செலுத்தும் நாம், தனித்திறன் வளர்ப்பில் கோட்டை விட்டு விடுகிறோம்.
இவற்றை செம்மைப்படுத்த, முதலில் பாடத்திட்ட வடிவமைப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சமுதாய மேம்பாட்டுக்கு உதவுவதாக பாடத்திட்டம் இருக்க வேண்டும். சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்க இன்றைய ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்பது வருந்தத்தக்கது.
பல ஆசிரியர்கள், பாடக் குறிப்புகள் கூட தயாரிக்கத் தெரியாமல் உள்ளனர். அதிலும், நாடு முழுவதும் இன்று 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஒரு மாணவனின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பல்கலையின் உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியம் என்பதால் தான் 44 பல்கலைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கல்வி வளாக சுதந்திரம் தேவை. ஆனால் கல்வியின் தரத்துக்கு இந்த சுதந்திரம் உத்தரவாதம் அளிக்காது. ஆராய்ச்சியில் பிற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது. ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பாலகுருசாமி பேசினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications