பத்தாவது வகுப்பில் பிட் அடித்த 18 பேர் சிக்கினர் - 4 பேருக்கு தேர்வு எழுத தடை
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாய் மொழியாம் தமிழிலேயே பிட் அடித்ததாக 18 பேர் பிடிபட்டுள்ளனர். முறையான வருகைப் பதிவு இல்லாத 4 பேருக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கி நடந்து வருகிறது. தேர்வில் காப்பி அடிப்போரைப் பிடிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளிலேயே தமிழ் முதல் தாளிலேயே காப்பி அடித்ததாக 18 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களில் விருத்தாச்சலத்தில் மட்டும் 12 பேர் சிக்கியுள்ளனர். செய்யாறில் 3 பேரும், சென்னை கிழக்கு கல்வி மாவட்டத்தில் 3 பேரும் பிடிபட்டனர்.
சென்னை பெரம்பூர் அருகே உள்ள எபினேசர் பள்ளியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், பால்மனோ, ஷோபனா, சந்துரு ஆகிய 4 மாணவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் அனைவரும் அரையாண்டு தேர்வு எழுதாமலேயே பொதுத் தேர்வுக்கு வந்துள்ளனர். சந்துரு 2009 நவம்பரில் இருந்து பள்ளிக்கே வரவில்லை.
விக்னேஸ்வரன், பால் மனோ, சந்துரு ஆகிய 3 பேருக்கும் பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தேர்வு எழுத வைக்கலாமா? என்பது பற்றி ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுத் தேர்வு எழுதுவதற்கு 75 சதவீதத்திற்கும் மேல் வருகைப் பதிவு வேண்டும், இல்லையெனில் முதன்மை கல்வி அலுவலரிடம் சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுத வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
