எதிர்காலத்தில் அதிமுக டெபாசிட்டாவது வாங்குமா?-கருணாநிதி

பென்னாகரம் அண்ணா திடலில் நேற்று இரவு முதல்வர் கருணாநிதி தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு முதல்வர் பேசுகையில்,
நான் வந்ததன் நோக்கம் வேறு...
யாரோ இங்கு பேசியதாக இங்கு பேசிய நண்பர்கள் குறிப்பிட்டார்கள். எத்தனையோ இடைத்தேர்தல் நடந்தபோது அதற்கெல்லாம் வராத கழக தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி இந்த தேர்தலுக்கு மாத்திரம் வந்திருப்பதன் நோக்கம் என்ன? என்று கேட்பதாக அவர்கள் சொன்னார்கள். நான் தேர்தலுக்கு வாக்கு கேட்பதற்காக இங்கு வரவில்லை. நான் வந்திருக்கிற நோக்கமே வேறு.
இங்கு உரையாற்றிய நண்பர்கள் அண்மையில் சென்னையில் சரித்திர புகழ்வாய்ந்த, என்றைக்கும் தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக்காட்டக்கூடிய சட்டப்பேரவை மண்டபம்; ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சட்டப்பேரவை வளாகத்தை நீங்களும் வந்து பார்க்க வேண்டும் என்று உங்களை அழைப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.
நீங்கள் அத்தனை பேரும் அங்கு வந்து எப்படி பார்ப்பது? அந்த அளவிற்கு இடம் இருக்கிறதா? என்று கேட்பீர்கள். அதனால்தான் உங்கள் சார்பாக ஒருவரை அந்த மண்டபத்திற்கு அனுப்பி வையுங்கள். யார் அவர் என்றால், அவர்தான் இன்பசேரகன் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளேன். அவர் வந்து பார்த்துவிட்டு புதிய சட்டப்பேரவை கட்டிடம் எப்படி இருக்கிறது? எவ்வளவு அழகாக இருக்கிறது? எத்தகைய வரலாற்று புகழ் வாய்ந்ததாக இருக்கிறது? என்பதையெல்லாம் அவர் வந்து உங்களுக்கு சொல்வார்.
புதிய சட்டப்பேரவையை பற்றியும் சொன்னார்கள். சிலர் அதற்கு வரவில்லை என்றும் சொன்னார்கள். நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். முறைப்படி அழைப்பு அனுப்பப்படவில்லை. ஆகவே, நாங்கள் வரவில்லை என்று சொல்கிறார்கள். முறைப்படித்தான் எல்லோருக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் தி.மு.க. ஆட்சிப்பொறுப்பில் இருக்கிற எல்லா காலகட்டங்களிலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மற்ற மாநிலங்கள் தொடர்புடைய நிகழ்ச்சியானாலும் அல்லது அகில இந்திய தொடர்புடைய நிகழ்ச்சியானாலும் இலங்கை பிரச்சினை அல்லது எந்த பிரச்சினை ஆனாலும் நடைபெறுகின்ற அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு நாங்கள் அழைப்பு எல்லோருக்கும் அனுப்புவோம்.
ஆனால், ஒரே ஒரு தலைவர் மாத்திரம் அந்த அழைப்பை உதாசீனப்படுத்தி அலட்சியப்படுத்தி அந்த அழைப்பை கேலி செய்து, கிண்டல் செய்து, எனக்கு பதில் எழுதுவது மாத்திரமல்ல அந்த விளக்கத்தை பத்திரிகைகளிலும் வெளியிட்டு என்னை அவமானப்படுத்துகின்ற ஒரே ஒரு கட்சி அ.தி.மு.க.தான்.
தமிழர்களுக்காகப் பாடுபடுகிறேன்...
எவ்வளவு அவமானப்படுத்தினாலும் நான் நாட்டுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக பாடுபடுகிறேன். இந்த அவமானத்தை தாங்கிக்கொண்டுதான் புதிய சட்டப்பேரவை கட்டிட திறப்பு விழாவுக்கும் அழைப்பு அனுப்பினோம். வேறொரு நிகழ்ச்சிக்கு தம்பி ஸ்டாலின் கடிதமே எழுதினார்.
20 லட்சம் ஏழை மக்களின் குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம். அந்த திட்டத்திற்கு 1,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதல் கட்டமாக ஒரு தொடக்க விழாவை திருச்சி மாநகரத்திலே முதல்-அமைச்சராகிய என்னை கொண்டு திறப்பதற்கு அதில் அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்து, அந்த விழாவை ஸ்டாலின் முன்னின்று நடத்தினார்.
அப்படி நடத்திய விழாவிற்கு அ.தி.மு.க. தலைமைக்கு ஸ்டாலின் தன் கைப்பட கடிதம் எழுதி அனுப்பினார். என்ன பதில் வந்தது தெரியுமா? எனக்கு வேறு வேலை இருக்கிறது. கொடநாட்டிலோ அல்லது வேறு இடத்திலோ.
இதுபோல ஒரு விழாவிற்கு வரவேண்டும் என்று அழைப்பு அனுப்பினால் அந்த கட்சி தலைவர் வரமுடியாவிட்டால், அந்த கட்சியிலே உள்ள அடுத்தக்கட்ட தலைவர்களை அனுப்புவது வழக்கம். அடுத்தக்கட்ட தலைவர் இல்லை என்றால் ஒரு செயலாளரை நான் வரவில்லை என்று சொல்லி அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால், அ.தி.மு.க. வில் இருந்து அடுத்த கட்ட தலைவர்கூட அனுப்பி வைக்கப்படவில்லை. காரணம் அங்கு வேறு தகுதியான ஆள் இல்லை என்பதை அவரே மறைமுகமாக ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
எதிர்க்கட்சியை மதிப்பவர்கள் நாங்கள்...
இதையெல்லாம் சொல்வதற்கு காரணம் எதிர்க்கட்சியை மதிக்க கற்றுக்கொண்டவர்கள் நாங்கள். அதே நேரத்தில் ஆளுங்கட்சியை அவமதிக்க கற்றுக்கொண்டவர்கள் அவர்கள்.
நான் எந்த அறிக்கை எழுதினாலும் ஜெயலலிதாவை பற்றி குறிப்பிடும்போது, அம்மையார் என்று எழுதவோ, சொல்லவோ தவறமாட்டேன். ஆனால், அவர் கருணாநிதி, கருணாநிதி என்றே சுட்டிக்காட்டி கிண்டலாக, கேலியாக பேசுகிறார் அம்மையார் ஜெயலலிதா என்பதை மறந்து விடக்கூடாது. பாருங்கள் இப்போதும் அம்மையார் என்றுதான் வருகிறது.
ஏன் இதை சொல்கிறேன் என்றால், நாம் ஒருவரை மதித்தால்தான் நம்மை அவர்கள் மதிப்பார்கள். இதுதான் மனித நாகரீகம். இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில், இந்தியாவில் வாழ்ந்து இருக்கிறார்கள். வாழ்ந்து மறைந்தும் இருக்கிறார்கள். இன்றும் புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களை மதிக்க மறுப்பது, தவறுவது இவர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்துகிறது என்பதை நீங்கள் இன்று அல்ல நாளை அல்ல வெகுவிரைவிலே காணத்தான் போகிறீர்கள்.
இங்கே தம்பி திருமாவளவன் பேசும்போது சொன்னார். தி.மு.க. அரசு வன்னியர் சமுதாயத்திற்கு எத்தகைய நன்மைகளையெல்லாம் அவர்களது கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றி அவர்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. அவர்களது உரிமைகளையெல்லாம் நிலைநாட்டி இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால், இதை அந்த கட்சியினுடைய தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அவர்கள் மறுப்பாரா? என்றால் மறுக்க முடியாது.
ஏனென்றால் அவர்கள் சொன்னதை அவர்களே மறுக்க முடியாது அல்லவா? கருணாநிதி மாத்திரம் இல்லாவிட்டால் வன்னியர் சமுதாயத்திற்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற அந்த இட
ஒதுக்கீடே கிடைத்திருக்காது என்று அவர்கள் என் கழுத்திலே சூட்டிய மலர் மாலையின் மணம் இன்றும் குறையவில்லை. ஆனால், அவர்கள் அதை மறந்து விட்டு ஏதேதோ பேசுகிறார்கள். நான் கவலைப்படவில்லை. டாக்டர் அய்யா சொன்னாராம், கருணாநிதி பணம் கொடுக்க வருகிறார் என்றெல்லாம் சொன்னாராம்.
நாங்கள் வரும்போதுகூட போலீஸ்காரர்கள், அதிகாரிகள் எங்கள் வேனை மறித்தார்கள். சோதிக்க போகிறார்கள் என்று கருதினோம். பரவாயில்லை சோதித்துவிட்டு போகட்டும் என்று ஸ்டாலினிடம் நான் சொன்னேன். ஆனால், அவர்கள் வண்டியை ஒரு முறை பார்த்து விட்டு போய் விட்டார்கள். ஏன் சொல்கிறேன் என்றால், பணத்தை வாரி இறைத்து தி.மு.க. வெற்றி பெற பார்க்கிறது என்று சொல்கிறார்கள்.
பிச்சை எடுத்தா வாக்கைப் பெறுகிறார்கள்...?
ஆனால், இவர்கள் தேர்தலில் பணமே செலவழிக்காமல் வெற்றி பெறுகிறார்களா? பணமே செலவழிக்காமல் பிச்சை எடுத்து வாக்குகளை பெறுகிறார்களா? இல்லை. தேர்தல் என்றால் ஒரு நியாயமான செலவு, தேர்தல் கமிஷன் நிர்ணயித்து இருக்கின்ற செலவு, அந்த ஆணையத்தின் அதிகாரப்படி அந்த கட்டளைக்கு இணங்க ஆகின்ற செலவை நாங்களும் செய்கின்றோம். இங்கிருக்கின்ற எல்லா கட்சிகளும் செய்துதான் தீரவேண்டும். இவர்கள் காசு இல்லாமல் தேர்தலில் நிற்கிறோம் என்று சொன்னால் அதை நாம் யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. அவர்கள் சொல்வதற்கு எல்லாம் பதிலுக்கு பதில் பேசும் அந்த பண்பை நான் கற்கவில்லை.
தி.மு.க.வை பொறுத்தவரை எனக்கு முன்னால் பேசியவர்கள் சுட்டிக்கட்டியதைபோல இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. என்ற 3 கட்சிகள் இருக்கின்றன. அந்த மூன்றைத்தான் நான் குறிப்பிட முடியும். குறிப்பிடக்கூடிய கட்சிகளைத்தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தேர்தலில் யாருக்கு அதிக செல்வாக்கு யார் அதிக வாக்குகளை பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்பு எல்லாம் வந்து இருப்பதாக சொன்னார்கள்.
அதிமுகவுக்காக வருத்தப்படுகிறேன்...
நான் கருத்து கணிப்பில் அதிக அக்கறை காட்டுபவன் இல்லை. அதை முழுமையாக நம்புபவனும் இல்லை. சில கருத்து கணிப்புகள் வெற்றி பெறலாம். சில கருத்து கணிப்புகள் நடைபெறாமலும் போகலாம். எனவே, இப்போதுள்ள தோராயமான கருத்து கணிப்பின்படி தி.மு.க.வுக்கு முதலிடமும், பா.ம.க.வுக்கு 2-ம் இடமும், அ.தி.மு.க.வுக்கு 3-வது இடமும் தரப்பட்டு உள்ளதாக கேள்விப்பட்டேன். பத்திரிகையில் பார்க்கவில்லை. கேள்விபட்டதுதான். அதற்காக உள்ளபடியே வருத்தப்படுகிறேன்.
ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்படுகிறது என்றால் எதிர்காலத்திலே டெபாசிட் வாங்குகின்ற இடத்திற்கு வருமா? என்ற அளவிற்கு நான் கவலைப்படுகிறேன்.
நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். தோல்வியை தழுவி இருக்கிறோம். அதற்காக கவலைப்பட்டது இல்லை. ஆனால், ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. இந்த தேர்தலில் பா.ம.க.வை 2-வது இடத்திற்கு உயர்த்திவிட்டு, 3-வது இடத்திற்கு போகின்ற அளவிற்கு கருத்து கணிப்பில் இடம் பெற்று இருக்கிறது என்றால், உள்ளபடியே நான் வருத்தப்படுகிறேன். அய்யா கருணாநிதியே வருத்தப்படுகிறார் என்பதற்காக நீங்கள் கைத்தூக்கி விட ஆரம்பித்து விடாதீர்கள்.
குதிரைக்கு எப்படி சவுக்கு தேவையோ, மாட்டுக்கு எப்படி மூக்கணாங்கயிறு தேவையோ அதுபோல ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சி தேவை என்று அண்ணா சொன்னார். ஆனால் இப்போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்கிறார்கள். இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு பெரிய கட்டிடம் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்ட சட்டப்பேரவை கட்டிடம் அழகான கட்டிடம் மட்டுமல்லாமல் அறிவுக் கூடமாகவும் திகழ்கிறது. அந்த கட்டிடத்தை திறந்து வைத்து டாக்டர் மன்மோகன்சிங் பாராட்டி பேசினார். வழிகாட்டும் தலைவர் சோனியாகாந்தியும் வாழ்த்தினார்.
ஒரு நல்ல காரியம் நடக்கும்போது நம் மக்கள் தீய காரியத்தை செய்ய மாட்டார்கள். திருமணத்தின்போது, ஒப்பாரி வைக்கமாட்டார்கள். அதைப்போல அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள் எல்லாம் இவ்வளவு பெரிய கட்டிடத்தை கட்டி இருக்கிறீர்களே என்று மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள். பிரதமரும், சோனியாகாந்தியும் எங்கள் வணக்கத்தைபெற்று வாழ்த்துக்களை சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால், இவர்கள் மாத்திரம் தங்கள் சுயரூபத்தை காட்டி கறுப்பு சட்டை அணிந்து கொண்டு வந்து துக்கம் கொண்டாடுகிறார்கள்.
நல்ல காரியத்தை துக்கமாக கொண்டாடுவார்களா...?
இவ்வளவு பெரிய விழாவிற்கு வந்து துக்கம் கொண்டாடுகிறார்களே தாய்மார்களே கிராமத்து பெண்களே எண்ணிப்பாருங்கள். ஒரு நல்ல காரியம் நடக்கும்போது, யாராவது துக்கம் கொண்டாடுவார்களா? அப்படி துக்கம் கொண்டாடுபவர்களை நீங்கள் என்ன சொல்வீர்கள் கிராமத்தில், துக்கிரிகை நிகழ்ச்சி என்று. இப்படிப்பட்டவர்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications