பொன்சேகா மருமகன் பற்றி தகவல் தந்தால் ரூ 4 லட்சம் பரிசு
கொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுனா திலகரத்னே குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ 4 லட்சம் பரிசளிக்கப்படும் என்று இலங்கை போலீஸ் அறிவித்துள்ளது.
இலங்கையின் ஆயுதக் கொள்முதல் தலைவராக இருந்தவர் தனுனா திலகரத்னே.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான கடைசிக் கட்டப் போரின் போது ராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அப்போதைய ராணுவ தலைமை தளபதியான சரத் பொன்சேகா, தனது மருமகன் திலகரத்னே நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் ஒப்பந்தத்தை பெற்றுத்தந்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் திலகரத்னே சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் லாபம் பார்த்ததாக தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக இலங்கை அரசு வழக்குத் தொடர்ந்தது. திலகரத்னேவை பிடிக்க நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.
விஷயம் தீவிரமானதும் திலகரத்னே தலைமறைவானார். அவர் இலங்கையில் உள்ளாரா அல்லது வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டாரா என்பது சரிவரத் தெரியவில்லை.
ஆனால் திலகரத்னே எந்த ஒரு நாட்டுக்கும் தப்பி ஓடவில்லை. அவர் இலங்கையில்தான் தலைமறைவாகியுள்ளார். அவர் ரோமிங் வசதியுள்ள செல்போனை பயன்படுத்தி தான் வெளிநாட்டில் இருப்பது போல் அதிகாரிகளை ஏமாற்ற முயற்சிக்கிறார் என்று சமீபத்தில் அந்நாட்டு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
இதையடுத்து, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளியான திலகரத்னேவுக்கு யாரும் அடைக்கலம் அளிக்கக்கூடாது. அவரை பற்றி தகவல் தெரிந்தால் உடனே சிபிஐ அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
திலகரத்னே இலங்கையில் இருப்பதாகவே அந்நாட்டு காவல்துறையும் நம்புகிறது.
வெளிநாடுகளில் உள்ள இவரது வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை பெற சர்வதேச போலீஸின் (இண்டர்போல்) உதவியை சமீபத்தில் இலங்கை அதிகாரிகள் நாடினர்.
இதனால்தான் அவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.4 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனிடையே முன்ஜாமீன் கோரி திலகரத்னே சார்பில் நீதிமன்றத்தில் பிப்ரவரி 10-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மூச்சு விட சிரமப்படும் பொன்சேகா:
இதற்கிடையே, ராணுவக் காவலில் உள்ள பொன்சேகா மூச்சு விட சிரமப்படுவதாக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியைச் சேர்ந்த அனுர குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொன்சேகா அமைத்துள்ள இலங்கை ஜனநாயக தேசிய கூட்டணியின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இருமல் காரணமாக சுவாசிப்பதற்கு பொன்சேகா சிரமப்படுகிறார். அவருக்கு காற்றோட்டமான,விசாலமான அறையை ஒதுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications