இதுவரை நடந்த 11 இடைத் தேர்தல்களிலும் வென்ற திமுக
சென்னை : தமிழகத்தில் கடந்த சட்டசபைப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 11 இடைத் தேர்தல் நடைபெற்றது. அத்தனையிலும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுமே வென்றுள்ளன.
தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடந்தது. திமுக ஆட்சியைப் பிடித்தது. சிறுபான்மை பலத்துடன் இருந்தபோதிலும், காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தது. இப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸும், விடுதலைச் சிறுத்தைகளும் மட்டுமே பெரிய கட்சிகளாக உள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 11 சட்டசபை இடைத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு ஆட்சியிலும் இந்த அளவுக்கு அதிகமான இடைத் தேர்தல்கள் நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த 11 இடைத் தேர்தல்கலிலும் திமுக கூட்டணியே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற முதல் இடைத் தேர்தல் மதுரை மத்திய தொகுதிக்கு நடந்தது. அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகப் பதவியேற்ற பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் சில நாட்களிலேயே மரணமடைந்து விட்டார். இதையடுத்து நடந்த இடைத் தேர்தலில் திமுகவின் கவுஸ் பாட்ஷா வெற்றி பெற்றார்.
அடுத்து 2007ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மேற்குத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் (அதிமுகவின் எஸ்.வி.சண்முகம் இதன் உறுப்பினராக இருந்தார்) திமுக கூட்டணி சார்பில் நின்ற காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.
பின்னர் கடந்த ஆண்டு எட்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. திருமங்கலம் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி திமுகவின் லதா அதியமான் வெற்றி பெற்றார்.
பர்கூருக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி திமுக வேட்பாளர் நரசிம்மன் வெற்றி பெற்றார்.
தொண்டாமுத்தூருக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி வெற்றி பெற்றார்.
இளையாங்குடிக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சுப.மதியரசன் வெற்றி பெற்றார்.
ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி வென்றார்.
கம்பத்தில் நடந்த இடைத் தேர்தலில் திமுகவின் கம்பம் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இவர் முன்பு மதிமுக சார்பில் இதே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அங்கிருந்து விலகி திமுகவுக்குத் தாவி மீண்டும் நின்று வென்றார்.
வந்தவாசியில் நடந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் வெற்றி பெற்றார்.
திருச்செந்தூரில் நடந்த பரபரப்பு இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் அதிமுக சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, பதவி விலகி, திமுகவில் இணைந்து போட்டியிட்டவர்.
தற்போது நடந்துள்ள பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மொத்தம் நடந்த 11 தொகுதிகளில் திமுக மட்டும் 8 தொகுதிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி மீதமுள்ள 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த 11 தொகுதிகளில், பர்கூர், மதுரை மேற்கு, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் பொதுத் தேர்தலில் அதிமுக வென்றிருந்தது. இடைத் தேர்தலில் மதுரை மேற்கையும், திருச்செந்தூரையும் திமுகவிடம் இழந்தது அதிமுக. பர்கூரில் போட்டியிடாமலேயே திமுகவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.
தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளை மதிமுக வைத்திருந்தது. இங்கு நடந்த இடைத் தேர்தல்களில் அக்கட்சி போட்டியிடவில்லை. மாறாக அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலைப் புறக்கணித்தது.
மேற்கண்ட 11 தொகுதிகளில், மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருச்செந்தூர், திருமங்கலம், இளையாங்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் திமுக சார்பில் தேர்தல் பணிக்குழுத் தலைவராகப் பொறுப்பேற்று வெற்றி வாகை சூடித் தந்தவர் மு.க.அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தொகுதிகளிலும் கூட அழகிரியின் 'வெற்றி பார்முலா'வையே திமுக கடைப்பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications