லாரி ஸ்டிரைக் ஒத்திவைப்பு!

டீஸல் விலையேற்ற வாபஸ் உள்ளிட்ட சில கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு முன்வராததால் குறிப்பிட்ட அவகாசத்துக்குப் பிறகு மீண்டும் லாரி ஸ்ட்ரைக் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் வருகிற 5-ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். கேஸ் லாரி உரிமையாளர்களும் இதற்கு ஆதரவளித்துள்ளனர். இந்த ஸ்ட்ரைக் நடந்தால் நாடே ஸ்தம்பித்துப் போகும் அபாயம் உள்ளது. எனவே லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்தது.
அதன்படி, நேற்று மாலை 5.30 மணிக்கு மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தில் இப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சாலைப் போக்குவரத்து அமைச்சர் கமல்நாத் தலைமை தாங்கினார். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமையிலான நிர்வாகிக கலந்து கொண்டனர். அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், பேச்சு இன்றும் தொடர்ந்தது.
இன்றைய பேச்சுவார்த்தையில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால் டீஸல் விலை உயர்வை திரும்பப் பெறுவதையும் இன்னும் சில கோரிக்கைகளையும் ஏற்கவில்லை.
எனவே பேச்சுவார்த்தையை இத்துடன் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ள மோட்டார் காங்கிரஸ், விரைவில் முழுமையான உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாகவும், அதற்கு வசதியாக இப்போதைய லாரி ஸ்ட்ரைக் திட்டத்தை ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தது.
உடன்பாடு எட்டப்படாவிட்டால், வேறு தேதியில் இதே ஸ்ட்ரைக் நடக்கும் என்றும் எச்சரித்துள்ளது மோட்டார் காங்கிரஸ்.
லாரி ஓட்டுநர்கள் எதிர்ப்பு!
இதற்கிடையே, குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்துள்ளவர்களுக்கு மட்டுமே லாரி ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்படும் என்ற விதிமுறையை வாபஸ் பெற வேண்டும் என்று அகில இந்திய லாரி ஓட்டுநர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாளை மறுதினம் நடக்கும் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் திட்டமிட்டபடி ஸ்ட்ரைக் தொடரும் என்று அறிவித்துள்ளது அந்த அமைப்பு.


Click it and Unblock the Notifications
