இந்தோனேசியாவில் கப்பலில் தவிக்கும் ஈழத் தமிழர்களை மீட்க புதிய தமிழகம் கோரிக்கை
சென்னை: கடந்த 6 மாதமாக இந்தோனேசியக் கடலில் கப்பலில் தவித்தபடி இருக்கும் 254 ஈழத் தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தக் கோரிக்கையை அவர் விடுத்தார். அப்போது அவர் கூறுகையில்,
ஈழ மண்ணில் வாழ வழியில்லாத்தால், அடிமைகளாக வாழ விரும்பாத்தால் ஏராளமான தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக போனார்கள். அப்படித்தான் கடந்த அக்டோபர் மாதம் பெண்கள், குழந்தைகளோடு 254 ஈழத் தமிழர்கள் கப்பல் மூலம் ஆஸ்திரேலியா சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்களை மடக்கிப் பிடித்த இந்தோனேசிய படையினர் தங்களது நாட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர்.
அன்று முதல் கடந்த ஆறு மாதங்களாக கப்பலை விட்டு இறங்காமல் மேரக் துறைமுகத்திலேயே அவர்கள் பரிதவித்துக் கொண்டுள்ளனர். .மருத்துவ வசதி கிடைக்காமல், அடிப்படை சுகாதார வசதி இல்லாமல், உணவு கூட கிடைக்காமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.
ஜேக்கப் என்ற வாலிபர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதே போன்ற நிலையில் அவர்கள் தொடர்ந்து இருந்தால் மேலும் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தாமதம் செய்யாமல், உடனடியாக அந்த்த் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. அகதிகள் ஆணையப் பிரதிநிதிகள், தமிழர்களை சந்திக்க இந்தோனேசிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications