தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள், கடற்படையினர் அடுத்தடுத்து தாக்குதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரும், மீனவர்களும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதால் தமிழக மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும், கொந்தளிப்பும் அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்க மீன் பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்தினர். பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதில் ஒரு படகு கடலில் மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த மீனவர்கள் உயிர் தப்பி இன்னொரு படகில் ஏறி விட்டனர்.
இந்தத் தாக்குதலிருந்து தப்பிய மீனவர்கள் கரைக்கு விரைந்து கொண்டிருந்தபோது தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படை வீரர்களால் மடக்கப்பட்டனர்.
சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து அவர்களின் வலைகளை அறுத்த எறிந்தனர். மீன்களையும் அள்ளிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர்.
சிங்களர்கள் இப்படி அடுத்தடுத்து நடத்திய தாக்குதலால் தமிழக மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களிடையே இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா சிறையிலிருந்து மீண்ட 2 மீனவர்கள்
இதற்கிடையே, இலங்கையின் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 2 மண்டபம் மீனவர்கள் மண்டபம் திரும்பினர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வரவேற்றனர்.
வவுனியா சிறையில் தங்களுக்கு கல், மண் கலந்த உணவு சாப்பிடத் தரப்பட்டதாக அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications